ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 111 (பகவத்கீதை உரை)
“யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவையா
யத்ர டைவாத்மனாத்மானம் பச்யன்னாத்மனி துஷ்யதி’’ (6:20)
‘‘யோகப் பயிற்சியால் சித்தம் அடங்கும் கட்டம் வரும்போது மனம் அமைதியாகி விடுகிறது. அதனால் ஆன்மாவும் மகிழ்கிறது. அதாவது அப்படி ஒரு நிலையை அடைந்தவன், ஆன்மாவால் ஆன்மாவைக் கண்டு கொண்டு, அந்த ஆன்மாவிலேயே மகிழ்வுறுகிறான்!’’
சித்தத்திற்கு ஓய்வே இல்லை. ஆனால் அந்த சித்தமே பரமாத்மா என்ற உண்மை புரிபடுமானால், சித்தம் முழுமையாக அடங்கும். வேத வியாசர், பீஷ்மர் மூலமாக அந்த பரமாத்மாவின்பேராற்றலை விவரிக்கிறார். யுதிஷ்டிரர் என்ற தர்மருக்கு வெளிப்படுத்திய துதி இது. அதில், ‘ஸித்தார்த்த ஸித்த ஸங்கல்ப ஸித்தித ஸித்தி ஸாதனா’ என்று ஒரு வரி. அதாவது அடையப்படாததாயும், இனி அடைதற்கு உரியதாயும் எதுவுமே பரமாத்மாவுக்கு இல்லை. ஆகவே, அந்தப் பரம்பொருளை நோக்கிச் செல்பவன் தன் சித்தத்தைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். இது யோகப் பயிற்சியால் கைகூடும் என்பது கிருஷ்ணனின் யோசனை. சுகத்தை நோக்கி அழைத்துச் செல்வதே சித்தத்தின் வேலையாக, இயல்பாக இருக்கிறது.
ஆனால், அந்த ஒவ்வொரு அனுபவத்தின்போதும் துக்கமே விடையாகும்போதும் சித்தம் பின்வாங்குவதில்லை; இது போகட்டும், அடுத்ததை பார்ப்போம் என்று இன்னொரு சுக அனுபவத்தை நாடுகிறது. இங்கும் தற்காலிக சுகத்திற்குப் பிறகு துக்கமே நேருகிறது. இவ்வாறான அலைக்கழிப்பை சித்தம் நிறுத்துமானால் அப்போது ஆன்மா மகிழும்; சித்தம், பரமாத்ம சொரூபத்தை தரிசிக்கும். ஏதோ சந்தர்ப்பம், பளிச்சென்று கோபம் வந்து விடுகிறது.
அதற்கான காரணம் அற்பமானதாக இருக்கலாம்; அல்லது கோபப்படுபவரின் தவறான புரிதலாகவும் இருக்கலாம்; அல்லது ஈகோவுக்கும் அதில் பங்கு இருக்கலாம். ஆனால், கோபத்துக்குப் பிறகு அந்தச் சூழலில் அமைதி இல்லை; வன்ம வெம்மைதான் நிலவுகிறது. இந்த வெம்மை, யார் மீது கோபம் காட்டப்பட்டதோ அவருக்கும் சரி, அவ்வாறு கோபப்பட்டவருக்குமே சரி, சுகமளிப்பதில்லை. பாதிப்பும், நஷ்டமும் ஏற்பட்ட பிறகு, சித்தம் யோசிக்கிறது.
‘அடடா, தவறு என்னுடையதுதான். சரியாகப் புரிந்து கொள்ளாமல், தீர விசாரிக்காமல் உடனே கோபப்பட்டது சரியில்லைதான். இனி இந்தக் கோபத்துக்கு இடமே கொடுக்கக் கூடாது,’ என்றுதான் நினைத்துக் கொள்கிறது. ஆனால், அடுத்த சம்பவத்தில் மீண்டும் கோபம் கொப்புளிக்கிறது. மீண்டும் சுய பரிசோதனை, மீண்டும் வருத்தம், மீண்டும் ‘இனி கூடாது’ என்ற வைராக்கியம்….. சித்தம் இவ்வாறு கலங்கினால், ஆன்மா எப்படி சுகப்படும்? பரமாத்ம நாட்டம்தான் எப்படி ஏற்படும்? இரண்டு விஷயங்கள். ஒன்று தவறாக செயல்படுவது; இன்னொன்று திறமையாக செயல்படுவது. தவறு, திருந்துவதற்கு வாய்ப்பளிக்காவிட்டால், அது தொடர்கிறது; அதே திறமை சாதனை புரிந்தால் அதன் மதிப்பு மேல் நோக்கி வளர்கிறது.
இரண்டுமே ஒரே இடத்தில் இருந்துதான் பிறக்கின்றன. தவறு திருத்தப்பட கண்டிப்பு, தண்டனை வேண்டும்; திறமை பிரகாசிக்க பாராட்டு, மரியாதை வேண்டும். பிறருடைய சம்பவங்களிலிருந்து அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் நமக்கும் ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றுமானால் அநேகமாக சித்தம் தெளிவடைய வாய்ப்பு இருக்கிறது. நம் கண்ணெதிரே ஒருவன் சாலை பள்ளத்தில் விழுகிறான் என்றால், ‘சேச்சே, எனக்கு இப்படியெல்லாம் நேராது, நான் எச்சரிக்கையுடன்தானே அடியெடுத்து வைக்கிறேன்,!’ என்று அதீத நம்பிக்கை கொள்கிறோம்.
ஆனால் நம்மையும் ஏமாற்றுவதற்காக வேறொரு பள்ளம் நமக்காகக் காத்திருக்கிறது. இந்தப் பள்ளத்தில் நாம் விழும்போது அதைப் பார்க்கவும், ‘நமக்கு நேராது’ என்று சிந்திக்கவும் அங்கே வேறு யாராவது இருப்பார்கள். இப்படி, தன் சொந்த அனுபவத்திலிருந்தும் சரி, பிறர் அனுபவத்திலிருந்தும் சரி, எது கூடாது என்பதை அப்போதைக்குப் புரிந்து கொண்டாலும், தொடர்ந்து அதைக் கடைபிடிக்க முடியாததுதான் சித்தத்தின் பலவீனம். இது உச்ச நிகழ்ச்சியான மரணத்துக்கும் பொருந்தும். பிரபல எழுத்தாளர் சுஜாதா இவ்வாறு சொன்னார்:
‘‘செய்தித்தாளில் மரண அறிக்கைகளைப் படிக்கும்போது, அவ்வாறு உலகை நீத்தவர் என்னைவிட வயது அதிகமானவராக இருந்தால், அப்பாடா நமக்கு இப்போதைக்கு இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ள முடிகிறது; அதே இளையவர் இறந்த செய்தியானால், ‘அப்பாடா நாம் இந்த வயதைக் கடந்து விட்டோம்’ என்றும் ஆறுதல் ஏற்படுகிறது! ஆனால் நம்முடைய வயது கணக்கீட்டுக்காகக் காலன் காத்திருப்பதில்லை என்பதுதான் உண்மை!’’ புதுச்சேரியில் ஒரு மயானத்தின் வாசலில் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்கள்;
‘இன்று இவர், நாளை நீ!’ இந்த வாசகம் இன்னும் அங்கே இருக்கிறதா அல்லது அந்த உணர்வுக்கு இடம் கொடுக்க விரும்பாத யாராவது அதை அழித்தோ, நீக்கியோ விட்டார்களா என்பது தெரியவில்லை! உலகை விட்டு நீங்கும் அந்த இறுதி கட்ட சம்பவத்துக்கு முன்னால் ஏற்படக்கூடிய பல துக்க, நஷ்ட அனுபவங்கள் நமக்குப் பாடம் புகட்டியிருக்கிறதா, அதைத் தொடரக் கூடாது என்ற உறுதியான, சலனமற்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இந்த கவனத்துக்கு யோகப் பயிற்சி பெரிதும் உதவும்.
புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டதே, ‘தனக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடுமா?’ என்ற சந்தேகம்தான்! நம்மை வயோதிகம் எட்டாது என்ற இறுமாப்பு கொள்ளும் வாலிபர்கள் இன்று நிறைய பேர். தன்னுடைய தந்தையாருக்கு ஒரு மண் சட்டியில் சாப்பாட்டைப் போட்டு மிகுந்த அவமரியாதையுடன் அவருக்கு உணவு கொடுத்த மகனிடம், ‘அப்பா அந்த சட்டியை பத்திரமாக வைத்திரு. அதை உனக்குப் பயன்படுத்த, எனக்குத் தேவைப்படும்,’ என்று பேரன் சொன்ன கதை நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அது எத்தகைய நோய் என்பதைத் தெரிந்து கொண்டு, அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய உடல்நல பாதிப்பு அறிகுறிகள் தமக்கும் தோன்றுகிறதா என்று செக் அப் பண்ணிக் கொள்பவர்கள் அதிகம். அவர்கள், அதே மாதிரியான உடல் நலக் கோளாறு தனக்கும் வந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுடன் முன்னேற்பாட்டு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எடுத்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்! அல்லது சுஜாதா சொன்னதுபோல,
‘அப்பாடா நமக்கு அந்த வியாதி இல்லை; பிழைச்சோம்,’ என்று ஆறுதல் பட்டுக் கொள்ளவும் செய்வார்கள். இதுதான் சித்தம் தெளிவடையாத நிலை. அவரைப் போலவே தனக்கு ஏற்பட்டுவிடும் என்ற பயம் நிறைந்த எதிர்பார்த்தல். பொதுவாக உயர்வுகளுக்கு இத்தகைய ஒப்பீடு கணக்கில் வருவதில்லை. ஏனென்றால் அது திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அந்தத் திறமை தனக்கு இல்லையே என்ற ஏக்கத்திற்கு பதிலாக, பொறாமை வரும்! அவரைப் போலவே தன் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருமானால் அது ஆக்கபூர்வமான எண்ணம். அதேசமயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கக் கூடிய உந்துதல், கற்பனை, செயலாற்று திறன் இவற்றை ஒட்டியே அந்த வளர்ச்சியும் அமையும்.
‘அவரைப் போலவே’ என்பது மாறி, தனக்கென தனி முத்திரை, அடையாளம் ஏற்படும்.
சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறுபவர்கள் ஒவ்வொருவரும் தனித் தனியான திறமை கொண்டவர்களாக இருப்பதை கவனிக்கலாம். அவரவர் மனநிலை, பயிற்சி முறை, கிடைக்கும் வாய்ப்புகள், எதிராளியின் பலவீனத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றால் அந்த வெற்றி ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. இந்த உள் பலத்தை வளர்க்க யோகப் பயிற்சி உதவுகிறது என்பது பலரது அனுபவமாக இருக்கிறது. அதாவது, அவர்களுடைய சித்தம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்று அர்த்தம். இவ்வாறு சித்தம் தெளிவுறுவதை உள்முகப் பரிசோதனயாகவே கருதலாம். இதை அடைய தினசரி பயிற்சி முக்கியம். குறிப்பிட்ட பொழுதில், குறிப்பிட்ட நேர அளவுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆனால், ‘இதற்கெல்லாம் ஒதுக்க எனக்கு நேரமில்லை’ என்ற விதண்டாவாதத்தில்தான் பலரும் இறங்கியிருக்கிறார்கள். நம்மை விட்டு நீங்கும் நேரத்தை நாம் எவ்வாறெல்லாம் செலவிட்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், வாழ்நாளின் பெரும்பகுதி நம்மை கேலி செய்துவிட்டு, நேரம் நம்மை விட்டு நீங்கியிருப்பதை அறிய முடியும். அதைத் திரும்ப வரவழைத்துக் கொள்ளவே முடியாது. நேரம் செலவிடுவது வேறு, பொழுது போக்கு வேறு. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள் – பொழுது போக்கு.
பொழுதைப் போக்குவது. பிடிவாதமாக நம்முடன் இயைந்திருக்கும் பொழுதை பிடித்துத் தள்ளுவது. தன் வாழ்நாள் ‘நீட்டிப்பின்’ மீதான அகங்காரம் இது. ‘நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தள்ளிப் போடுவது அல்லது தவிர்ப்பதன் பெரிய நஷ்டம், அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும். நேரம் என்பது ஒரு பெரிய பூதம். அதற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வேலை எந்த அளவுக்கு உபயோகமானதோ, அதற்காகக் கடந்துபோகும் நேரமே பெருமை கொள்ளத் தக்கது; அந்த வேலையையும், நேரத்தையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு சித்தம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒருநாளில் நேரத்தைச் செலவிட மேற்கொள்ளும் வேலைகளைப் பகுத்துக் கொள்ள வேண்டும். ‘நேரத்தைச் செலவிடுதல்’ – மிகச் சரியான சொற்றொடர். ஏனென்றால், வீண் செலவை நாம் பொதுவாக விரும்புவதில்லை! ஆனாலும், சித்தம் தெளிவாக இல்லாததால் அனாவசிய செலவுகளைச் செய்து விட்டு, மருத்துவம், சிகிச்சை என்ற அவசியத் தேவைகளுக்காகவும் ‘அனாவசியமாக’ செலவு செய்து கொண்டிருக்கிறோம்! சித்தம் தெளிவாக இருந்தால், திட்டமிடுதல் எளிதாகும்.
‘டைம் மேனேஜ்மென்ட்’ என்ற நேரக் கட்டுப்பாடு நம் கைக்கு வரும். ஒருநாள் இரவில் அன்றைய நம்முடைய நடவடிக்கைகளை மனசுக்குள் மறு ஓட்டமாக ஓட்டிப் பார்க்கும்போது, அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கினால், அதுவே திட சித்தத்தின் வெற்றி. இவ்வாறு சித்தம் பரிசுத்தம் ஆகும்போது, ஆன்மா மகிழ்கிறது. குறிப்பாக, தன்னலமில்லாத, சுய சம்பாத்தியம், சுய சுகம் என்ற தற்குறிகளை நீக்கி, நேரத்தைப் போக்கும் செயல் பாடுகள் அதிகமான மகிழ்ச்சியைத் தரும். ஏனென்றால் இந்த முனைப்பில் எதிர்பார்த்தல் இல்லை, அதனால் ஏக்கமும் இல்லை. பொருள் சேர்க்கை ஆசை இல்லை, அதனால் பொறாமை இல்லை. சுவாசம் இயல்பாக, சீராகப் போய் வருகிறது. அதனால் நோய்ப்பட வாய்ப்பில்லை. இதுவே நேரத்தை முறையாக செலவிட்டதற்கான அங்கீகாரம். சித்த சுத்தத்தின் பிரத்யேக பலனே துக்கத்தை நாமே எதிர்கொண்டழைக்காததுதான்.
எந்த துக்கமும் தானாக, எங்கிருந்தோ, யார் ஏவிவிட்டோ வருவதில்லை; அதை வரவேற்பதே நாம்தான். வக்கிர எண்ணம், அதைத் தொடர்ந்து வஞ்சக செயல்பாடு, அதனால் வெற்றி கிட்டியதாகிய தற்காலிக சந்தோஷம், அதைத் தொடருவதால் வளரும் எதிர்மறை விளைவுகள், ஒரு கட்டத்தில் நம்மையே விழுங்கத் தயாராக இருக்கும் வேதனை… இதிலிருந்தெல்லாம் விடுபட யோகப் பயிற்சி மிகவும் அவசியம். அதனால், திட சித்தம் சாத்தியம். அதற்கென்று ஒரு நாளில் நேரம் ஒதுக்கப்படுவது, மிகவும் உபயோகமான செலவுதான். இவ்வாறு கிட்டும் சித்த சுத்தத்தால், ஆத்மா மகிழும். அதன் மகிழ்ச்சிக்குக் காரணம், அது பரமாத்மாவுக்குச் சொந்தமானது என்பதால்தான்!
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
