காரைக்கால் அம்மையார் கதை – 6
கடவுளை கண்டவரின் வியப்பு, எந்த எண்ணங்களுமற்றது. உலகாளும் பிரம்மாண்டத்தை, “ஹா’’ வென்ற மிரட்சியோடுபார்க்கின்ற செயல்மட்டுமே கொண்டது. அந்தவியப்பும், மிரட்சியும் அடங்கும்வரை, தணியும்வரை, ஞானிகள் பித்தராகவே, பேயராகவே அலைவர். அகோரமாகவே திரிவர். ஆனால், மெல்லமெல்ல இயல்புக்கு திரும்பியபின், அவர்கள் முகம்கொள்ளும் பிரகாசம், சாமான்யமுகங்களிடம் காணமுடியாதது. அது, ஐந்துமுகம் கொண்டு ஜொலிக்கும்சுடருக்கு ஈடானது. ஆனால், புனிதவதியார், தெய்வீக அம்சத்திலிருந்து, சுடர்நிகர் முகவடிவிலிருந்து, சிவபூத கணங்களை போன்ற பேய்வடிவை, ஈசனிடம் விரும்பி கேட்டுப்பெற்றார்.
காரைக்காலம்மையார் ஆனார். நடந்த அதிசயத்திலிருந்து வெளிவர, உறவுகளுக்கெல்லாம் பல நாழிகையானது. ஒருநிமிடத்தில் அழித்துவரைந்த, வேறொருகண்ணாடி ஓவியம்போல, சட்டென பொலிவுத் தேகமழித்து, எலும்பில் தோல்மட்டும் போர்த்தியிருந்த உடம்பாய், பேய்வடிவு தாங்கி, புனிதவதியார் காரைக்காலம்மையாராகி நிற்பதுகண்டு, அவரைப் பெற்றவர்கள் அலறினர்.
தனதத்தர் வாயில் துண்டை வைத்துக் கொண்டு “மகளே, புனிதா’’ என கதறினார். நீதிபதியும், பரமதத்தனும் விக்கித்துப்போய் நின்றார்கள். உறவுகள் அஞ்சியொதுங்கின. குழந்தைகள் அலறின. “அழகே, பெண் களின் கிரீடமென” கர்வம்கொண்டிருந்த சிலபெண்கள், மயங்கிவிழுந்தனர். பரமதத்தன் “என்அம்மையே’’ என கதறியபடி, காரைக்காலம்மையாரின் காலில் விழுந்தான். ஓலமாயழுதபடி, அவர் பாதத்துளியெடுத்து நெற்றியிலிட்டுக் கொண்டான்.
இம்முறை காரைக்காலம்மையார், நகராது நின்றார். “எல்லாமென் அப்பன்செயல்’’ என்கிற சிந்தனையோடு, சுற்றிநின்ற அனைவரின் கதறலுக்கும், அலறலுக்கும் அசராது, அமைதி காத்து, ஈசனின்நினைப்போடு நின்றார். அந்தநினைப்போடு ஈசனைப்போற்றி, 101 பாடல்களை கொண்ட “அற்புதத்திருஅந்தாதி’’ என்கிற தொகுதியைப்பாடினார். முடிகிறசொல்லில், தொடங்குகிற, “அந்தாதி” என்கிற அற்புத பாடல்வடிவம், அவரால்தான் தமிழுக்கு முதன்முதலில் தரப்பட்டது. பாடியபின், காரைக்காலம்மை, எல்லோரையும் வணங்கி, “விடைகொடுங்கள்’’ என்றார். “எங்களோடே இருந்துவிடம்மா’’ என்று கதறிய தாய்தந்தையரின் பாதம் விழுந்து வணங்கி, “இல்லை, இனி என்உலகம் வேறு’’ என மறுத்து, வாசல்நோக்கி நகர்ந்தார். உறவுகளின் கதறல்கள் முதுகில்மோத, வீடுதுறந்தார்.
காலப் போக்கில் தெய்வத்தன்மை அவருள்நிலைத்து, வலுவானது. நினைத்த இடத்திற்கு, காற்றிலேறி பயணிக்கும் தவசக்தியும், ஈசனால் அவருக்கு கைகூடியது. தொடர்ந்து, காரைக்காலம்மையார் தென்னகத்து சிவாலயங்கள் தோறும் சென்று வழிப்பட்டு, பதிகங்கள் பாடத்துவங்கினார். ஆலயங்களை தரிசித்து, பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்களை பாடும்முறையும் அவரால்தான் தமிழுக்குத்தரப்பட்டது. அவர்தந்த வழிவகையில்தான், சமயகுரவர் மூவரும் தேவாரப் பதிகங்கள் பாடினார்கள். அதனால்தான் காரைக்காலம்மையாரின் பதிகங்கள் “மூத்தப்பதிகங்கள்” என்றபெயரில் வழங்கப்படுகிறது.
மேலும், கனிந்த காரைக்காலம்மையார், கைலாயத்தை தரிசிக்க எண்ணம்கொண்டு, தன் தவவலிமையால் கயிலை சென்றடைந்தார். ஆனால் கால்பட்ட இடமெல்லாம், லிங்கங்களாய் இருப்பது கண்டு, கால்கள் தரையில் வைக்கக்கூசி தலையால் நடந்தார். தலையால் நடந்தபடி, பேயுறுவொன்று கயிலைமலை உச்சிநோக்கி வருவது கண்ட, கைலாயநாதனோடிருந்த அன்னை உமாதேவி, “அஞ்சத்தக்க உருவத்தோடு, இத்தனை கடுமையான தவத்தோடு கயிலை ஏறிவரும் இவர் யார்?’’ என கேட்க, அழகிய புன்னகையோடு அருட்சிவன், “வருமிவள் நம்மைபேணும் அன்னைகாண் உமையே – மற்றிப்பெருமை சேர் வடிவம் வேண்டிப்பெற்றாள்’’ என்றார்.
(கன்னடத்தில் ஹரிஹர ஹம்பே என்கிற கவி, காரிகாலம்மை ரகளே என்று எழுதிய நூலில், இந்த சம்பவத்தை வேறுவிதமாய் வர்ணிக்கிறார். மலையேறிவரும் பேயுறுகண்டு, பயந்து, தன்பின்னே ஒளிந்துகொள்ளும் அன்னைபார்வதியிடம் ஈசன், “அல்ல எலே கௌரி, நும்அத்தை, நம்மன்னை’’ என உமையின்பயம் போக்குவதுபோல உரைக்கிறார். அதாவது, “இவள் என்னைப் பெற்றவள், எனக்கு கனியீந்தவள், என்தாய், உன்அத்தை, காரைக்காலம்மை. இவரை வணங்கி, அவரது ஆசியை பெற்றுக்கொள்’’ என பரமசிவன் சொல்வதுபோல, ஹரிஹர ஹம்பே வர்ணிக்கிறார். “இது உன்அத்தை’’ என சொல்வது இதில்அழகு) கயிலை உச்சியடைந்து, தன்னை வணங்கி நிற்கும் காரைக்காலம்மையாரை பரமன் வரவேற்று, “என் அம்மையே, வருக’’ என அழைத்தார். பிறப்பேயில்லாத ஈசன், தன்னைப் பெற்றவள் என்கிறபெருமையை, காரைக்காலம்மைக்கு தந்தான்.
காரைக்காலம்மையாரும், “என் அப்பா’’ என மறுமொழி சொல்லி வணங்கினார். “எம்மிடம் ஏது வேண்டுமுனக்கு’’ என இறைவன் கேட்க, தாள்பணிந்து வணங்கிய தாயவள், “அய்யனே, வேண்டுவது ஏதுமில்லை. அப்படியேதும் உண்டென்றால், எனக்கு பிறவாமைவேண்டும். மீண்டும் பிறப்புண்டேல், உன்னை மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும், நான்மகிழ்ந்து பாடி, அரவா நீ ஆடும்போது (உன்) அடியின் கீழ் இருக்க’’ என்றார். மகிழ்ந்த எம்பெருமான், “நீபாடி, நானாடும் கோலம்காண, திருவாலங்காட்டிற்கு வா. அங்கு எனது அழகியநடனம் காண்பாய்’’ என ஆசி கூறியனுப்பினார்.
ஆலங்காட்டிற்கு வந்தடைந்த அம்மை, மீண்டும் தலையால் நடந்து, ஊரெல்லை கடந்து, சுடலைப் பொடிநாயகனின் நடனம் நிகழவிருக்கும் சுடுகாடடைந்தார். பேய் களின் கூச்சலுக்கு இடையே, கூத்துக்களுக்கு நடுவே, சாம்பல்பூசிய நாயகன் உமையோடு ஆடிய ஊர்த்துவ தாண்டத்தை தரிசித்து, ஆனந்தமானார். (ஞான சம்பந்தரும், சுந்தரரும், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த திருவாலங்காட்டை காலால் மிதித்தல்கூடாதென, ஊர் எல்லையிலிருந்தே திருப்பதிங்கள் பாடினார்கள் என்பது புராண வரலாறு).
அந்த ஆனந்தத்தோடு, ஆடல்நாயகனை போற்றி, “திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்’’ என்ற தொகுதி பாடினார். அந்த பாடல்களாலும் ஆனந்தம் கொண்ட பரமன், அவரை தன் பெரும்ஜோதியில் சேர்த்துக் கொண்டார். காரைக் காலம்மையார் ஈசனோடு ஒன்றானார். காலத்தில் நிலையானார்.
இதுவே காரைக்காலம்மையார் சரிதம். எளிய, அதே நேரத்தில், அடத்தியானபக்தி, இறைவனை நமக்கு காண்பிக்கும் என்பதே, அவர்வாழ்வு நமக்கு காட்டும் வழி. மூன்று தொகுதிகளை கொண்ட, வெறும் 143 பாடல்களை பாடியிருந்தாலும், காலம் தாண்டி, காரைக் காலம்மையாரின் பெயர் நிலைத்துநிற்பதற்கு, அவர் எளியபக்தியே சாட்சி. அவர் பாடல்கள் அத்தனையும் அற்புதமானவை. 101 பாடல்களை கொண்ட அற்புத திருவந்தாதியும், 20 பாடல்களை கொண்ட திரு இரட்டை மணிமாலையும், நம்மனதை வேறொருதளத்திற்கு கொண்டு செல்பவை. அதிலும், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்கிற பாடல்கள் மிரட்டுபவை.
கொங்கைதிரங்கி, எட்டிஇலவம் என்கிற தலைப்பில் 22 பாடல்களை கொண்ட, அந்தப் பாடல்கள், திகிலானவை. சுடுகாட்டிலுலவும் பேய்களின் இயல்பையும், குணத்தையும், உருவத்தையும், ஊளையிடுதலையும், ஒரு திகில்படத்திற்கு நிகராக விவரித்து பயமுறுத்துபவை. அந்தத்திகிலையும், மிரட்டலையும் நமக்குச் சொல்லி, நம்மை பயமுறுத்தி, “ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே’’ என முடிவடையும் அந்தப் பாடல்கள் அற்புதமானவை.
அதுமட்டு மில்லாமல், எழுதிய இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றின் கீழும், “இப்படிக்கு” என கையொப்பமிடுவதுபோல், பாடல்களின் முடிவில், “காரைகாற்பேய்’’ யென, தன்பெயரை காரைக் காலம்மையார் குறித்திருக்கிறார். இப்படி, தன்பக்தியால் சைவத்திற்கும், தன்பாடல்களால் தமிழுக்கும், பெருமைசேர்த்த காரைக்காலம்மையாரை, முடிந்தால் திருவாலங்காடு சென்று பார்த்துவிட்டு வாருங்கள்.
நடராஜசபையில், நடனமாடும் நாயகன்காலடியில் அமர்ந்திருக்கும் அவரைகண்டு, வணங்கிவிட்டு வாருங்கள். செல்ல இயலாதவர்கள், எல்லா சிவன்கோயிலிலும், நின்றகோலத்திலிருக்கும் நாயன்மார்கள் மத்தியில், அமர்ந்தகோலத்திலிருந்து ஆசிர்வதிக்கும் அவர்முன் நின்று, நம்வீட்டு மூத்தக் கிழவியிடம் பணிந்து நிற்பதுபோல பணிந்து வணங்கி, “உன் சிவபக்தி என் தலைமுறை முழுமைக்கும் பரவும்படி ஆசிர்வதித்து, திருநீறு பூசிவிடும்படி’’ மனதால் வேண்டிக் கொள்ளுங்கள். அருவமாய்நின்று, உங்களுக்கு திருநீறு பூசிவிடுவார்.
உங்களை, உங்கள் தலைமுறையை தலைதடவி ஆசிர்வதிப்பார். ஏனெனில், நம்மால் அப்பாவென அழைக்கப்படுகின்ற ஈசனே, “அம்மா’’ வென்று அழைத்ததால், காரைக் காலம்மையார் நமக்கு “அப்பத்தா’’ முறை. நாமெல்லோரும், காரைக்காலம்மையாரின் பேரன்மார் வகையறாக்கள். நிச்சயம், நம்மெல்லோரையும், காரைகாலம்மை ஆசிர்வதிப்பார். காரணம், பேரன்மார்களை நேசிக்காத, பாட்டிகள் உண்டாயென்ன…
குமரன் லோகபிரியா
