பொதுவாகவே சிலர் பிறக்கும்போதே தங்கத் தொட்டிலில் தவழ்ந்து வெள்ளித் தட்டில் சாப்பிடும் பணக்கார நிலையில் பிறந்திருப் பார்கள். (born with Silver spoon)ஆனால், பணம் என்பது வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.காரணம், செல்வம் என்றாலே ஓரிடத்தில் இல்லாமல் சென்று கொண்டே இருப்பது தான். கிரகங்களும் அப்படித்தான். அதுவும் ஒரு நிலைபெற்ற நிலையில் இருப்பதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கின்றன.அதனால்தான் பெரும்பாலும் நாடி ஜோதிடங்களில் ஜன்ம ஜாதகங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கோள் சார நிலைக்கு முக்கியத்துவம் தந்து, ஜன்ம ஜாதக நிலையோடு கோள் நிலைகள் இணையும் காலகட்டத்தை கணக்கிட்டு பலன் சொல்வார்கள், வாழ்க்கையில் பணம் இணையும் அல்லது விலகும் பல நிலைகள் உண்டு.
* பிறக்கும் போது பணக்காரனாக பிறந்து இறக்கும்போது பணமில்லாமல் இறப்பது.
*பிறக்கும்போது மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து கடைசி காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாக இறப்பது.
* பிறக்கும் போது பணம் இல்லாமல் இருந்து இடையில் பணச் செழிப்போடு வாழ்ந்து முடிவில் பணம் இல்லாமல் இறப்பது.
*பிறக்கும் போதும் பணம் இல்லாமல் இருந்து, வாழும்போதும் பணம் இல்லாமல் இருந்து, இறக்கும்போதும் பணம் இல்லாமல் ஏழ்மை நிலையிலே கஷ்டப்பட்டு இறப்பது.
இந்த நிலைதான் மிகுந்த மோசமான நிலை.ஒரு ஜாதகத்தில் முக்கியமான கிரகங்கள் மற்றும் ஸ்தானங்கள் பழுதுபட்டிருந்தால் இப்படிப்பட்ட தரித்திர நிலை உருவாகிவிடும்.ஆனாலும் கூட இவர்கள் முயற்சி செய்திருந்தால் ஓரளவாவது நிலைமையை சமாளித்து இருக்கலாம். என்னதான் கிரகங்கள் ஒருவரை மனரீதியாக அழுத்தினாலும் கூட, அதையும் மீறி வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு ஒருவன் உழைக்கின்ற பொழுது அவன் உயர்ந்த நிலையை அடைந்து விட முடியும் என்பதையும், நான் சில ஜாதகங்களை மீறிய முயற்சியாகப் பார்த்திருக்கிறேன்.இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு ஜோதிட ஆலோசனையே தேவைப்படுகிறது. காரணம் ஜோதிட ஆலோசனை என்பது ‘‘உன் தலைவிதி இவ்வளவுதான், இத்தோடு உன் கதை முடிந்தது’’ என்று சொல்வதற்கு அல்ல. அதுதான் அவனுக்கே தெரியுமே.
என்ன ஆலோசனை சொல்ல வேண்டும் தெரியுமா?
‘‘அப்பா! உன் ஜாதகத்தில் பல கிரகங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக இல்லை ஆகையினால் நீ அதிர்ஷ்டத்தை நம்புவதில் பலனில்லை. முயற்சியை நம்பு. அது ஓரளவுக்காவது உனக்கு பலன் அளிக்கும்’’ என்று சொல்வதற்கு தான் ஜாதகம் தேவைப்படுகிறது. ஒரு விதத்தில் இது மனதிற்கு உற்சாகம் தருவது. ஒருவருடைய ஆற்றலை வளர்ப்பது.இதைத்தான் வள்ளுவர், ‘‘தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்’’
என்றார்.பணத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாகச் சொல்ல வேண்டும்.
*சிலருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் பணத்திற்கான நெருக்கடியும் இருந்து கொண்டே இருக்கும்.
* சிலர் பெரிய அளவு பணம் வைத்துக் கொள்ளாதவர்களாக இருந்தாலும் தேவைக்கு பணம் இருந்து கொண்டே இருக்கும்.
எத்தனை கோடி இருக்கிறது என்பது முக்கியமல்ல. அது உதவும் படியாக இருக்கிறதா? சமயத்திற்குக் கை கொடுக்கிறதா? என்பது முக்கியம். பரசுராமரின் சாபம் கர்ணனுக்கு ஆபத்து காலத்தில் கை கொடுக்கவில்லை. கர்ணனிடம் அஸ்திர பயிற்சி இருந்தது. ஆனால் எப்பொழுது பயன்பட வேண்டுமோ அப்பொழுது பயன்படவில்லை. அது போலவே சிலருக்கு பணம் சொத்துக்களாக இருக்கும். ஆனால் சமயத்துக்கு பயன்படாது. முதலீட்டில் சிலர் பணத்தை பெருக்குவதிலேயே கவனமாக இருப்பார்கள். செலவு செய்ய மாட்டார்கள். செலவு செய்யலாம் என்று நினைக்கும் பொழுது அதற்கான வாய்ப்பே அவர்களுக்கு இருக்காது.
எனக்கு வேண்டிய ஒருவர், ஓரளவு வருமானம் தரக்கூடிய வேலையில் இருந்தார். அவர் அடிக்கடி லோன் போடுவார். அந்த லோனோடு இன்னும் சில பேரிடம் கடன் வாங்கி ஏதாவது ஒரு பொருளையோ இடத்தையோ வாங்கிப் போடுவார். அடுத்து வரும் சம்பளம் அந்தக் கடனுக்கு வட்டி கட்டுவதிலும் கடனை அடைப்பதிலும் போய்விடும்.அவர் செய்த முதலீடு பெருகியது என்றாலும் பெரும்பாலான நேரங்களில் கைச்செலவுக்கு பணம் இல்லாமல் கடனாளியாக தவிப்பார். அவருடைய பணம் மற்றவர்களுக்குத் தான் பயன் படுமே தவிர அவருக்குப் பயன்படாது.ஒருமுறை அவருடைய குழந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்பட்ட பொழுது மிகுந்த நெருக்கடியில் இருந்தார். ஒரு வாரத்திற்கு முன்னால் தான் அவர் பல்வேறு முறையில் பணம் திரட்டி ஒரு காலிமனை நல்ல விலைக்கு வருகிறது என்று வாங்கிப் போட்டார்.
இப்போது கையில் சுத்தமாக பணம் இல்லை. அவருடைய சொத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருந்தாலும் மருத்துவ மனையில் குழந்தைக்கு மருத்துவ செலவிற்குப் பணம் கட்ட முடியாத நெருக்கடியில், தவித்தார். காலி இடம் வாங்குவதற்காக யார் யாரிடம் எல்லாம் கடன் வாங்க வேண்டுமோ அவர்களிடம் எல்லாம் ஒரு வாரம் முன்னால் தான் வாங்கி இருந்தார். வாங்கிய வீட்டு மனையை இரண்டு மணி நேரத்தில் விற்று பணத்தைப் புரட்டிக் கட்ட முடியுமா?.இந்த மாதிரி ஜாதக நிலைகளும் உண்டு. பணம் இருந்தும் இல்லாத நிலை. சிலருக்கு பணம் இல்லாத போதும் யாராவது ஒருவர் வலிய வந்து கொடுத்து உதவுவார்கள் தக்க நேரத்தில் கடன் தருவார்கள்.எனவே, பொருளாதாரத்தின் தன்மையை கிரகங்கள் எப்படிச் சொல்லுகின்றன? சரியான பாவத்தொடர்புகளை கிரகங்கள் பெற்றிருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.அடுத்தது மிக முக்கியமாக தசாபுத்திகள் கை கொடுக்க வேண்டும்.
பாக்யாதிபதி திசையில் சம்பாதித்த பணம் அந்த திசை முடிவதற்குள் செலவு செய்து அடுத்து அஷ்டமாதிபதி திசை வருகிறது என்று சொன்னால் படாத அவஸ்தைப்பட வேண்டி இருக்கும்.எனவே, பொருளாதாரத்தின் நிலையை ஜனன ஜாதகம் மட்டுமல்ல, கோள் சாரமும், தசா புத்திகளும் கூட தீர்மானிக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.ஒரு உதாரணம். மிதுன லக்ன ஜாதகம். இரண்டாம் இடத்திற்கு உரிய சந்திரன் லக்னத்திலேயே இருக்கிறார். லக்னாதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். சந்திரனுக்கு சாரம் கொடுத்த செவ்வாய் (மிருகசீரிஷம்) ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆறாமிடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் அதாவது லக்னாதிபதி நட்சத்திரத்தில் இருக்கிறார்.கிரகங்கள் அனைத்தும் சுபபலன் பெற்று இருந்ததால் இவர் பிறந்ததிலிருந்து பணத்திற்காக கஷ்டப்பட்டது கிடையாது. இப்பொழுது வெளிநாட்டில் மிகப்பெரிய பொருளாதார வசதியோடு மருத்துவராக இருக்கிறார். இப்படி கிரகங்கள் வலிமையான அமைப்பில் சுப பலத்தோடு அமைந்துவிட்டால் அவர்கள் பிறக்கும் போதும் பணக்காரர்கள் தான், வாழும் போதும் பணக்காரர்கள்தான்.
பணத்தை அவர்கள் தேடிப் போக வேண்டியது இல்லை. அவர்களைத் தேடி பணம் வரும்.இன்னும் சொல்வேன்.
