×

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு

சேலம், ஜன.28: சேலம் மாநகராட்சியில் ₹1000 கோடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அழிப்பதாகவும் திமுக எம்.பி. பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, வியாபாரிகள் திமுக எம்பி பார்த்திபனிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்து மாநகராட்சி கமிஷனர் (பொ) அசோகனை சந்தித்து  ஒரு புகார் மனு அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:

சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் வியாாரிகளிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் ₹1000 கோடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு பணியும், தரமாக இல்லை. பல்வேறு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை ரகசியமாக  எரித்து அழிக்க, அதிகாரிகள் சிலர்  திட்டமிட்டுள்ளனர். அந்த ஆவணங்களை பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்க உள்ளேன். இந்த பிரச்னைகளுக்கு 10 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படாவிட்டால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், மாநகராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு  பார்த்திபன் எம்.பி.  தெரிவித்தார். 

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா