×

மதுரை அலுவலகத்தில் முறைகேட்டை கண்டுபிடித்ததால் கொடூரம்; எல்ஐசி பெண் முதுநிலை மேலாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: விபத்து நாடகம் ஆடிய உதவி அதிகாரி அதிரடி கைது

மதுரை: மதுரை எல்ஐசி கிளை முதுநிலை பெண் மேலாளர் தீ விபத்தில் இறந்த வழக்கில் உதவி நிர்வாக அதிகாரி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மதுரை ரயில் நிலையம் அருகே, மேலமாரட் வீதியில் வணிக வளாகத்தின் 2வது தளத்தில் எல்ஐசி நிறுவன கிளை அலுவலகம் உள்ளது. இங்கு முதுநிலை மேலாளராக மதுரை பொன்மேனியை சேர்ந்த கல்யாணி நம்பி (55) பணிபுரிந்து வந்தார். இந்த அலுவலகத்தில் கடந்த டிச.18ம் தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார். உதவி நிர்வாக அதிகாரியான மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த ராம்(45) காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

கல்யாணி நம்பியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது குடும்பத்தினர் மதுரை திலகர் திடல் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில், உதவி நிர்வாக அதிகாரி ராம் நேற்று காலை கைது செய்யப்பட்டார். விசாரணையில், கல்யாணிநம்பியை தீ வைத்து எரித்து ராம் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து இவ்வழக்கு தற்ேபாது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தாயார் கல்யாணி நம்பியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மகன் லட்சுமி நாராயணன் (25) திலகர்திடல் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் விசாரணை தீவிரமடைந்தது. எல்ஐசி அலுவலகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். இதில் தீவிபத்து நடந்த நாளில் காயமடைந்த நபரான உதவி நிர்வாக அதிகாரி ராம் மீது சந்தேகம் எழுந்தது. ராம் தனியார் மருத்துவமனையின் தீக்காய பிரிவில் சிகிச்சையில் இருந்ததால், சற்று தாமதத்துடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில்தான் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது.

தீ விபத்தில் உயிரிழந்த கல்யாணி நம்பி, கடந்த மே மாதம் திருநெல்வேலியில் இருந்து பணி உயர்வு பெற்று மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்திற்கு வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக ராம் பணிபுரிந்த நிலையில், அவர் தொடர்பான சில ஆவணங்களில் குளறுபடி மற்றும் விபத்து தொடர்பான இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்யாணிநம்பி அவரிடம் சில மாதங்களாக தொடர்ந்து விசாரித்துள்ளார். கடந்த டிச.18ம் தேதி ராம் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.

இதை பார்த்த கல்யாணி நம்பி, அவரது மகனுக்கு செல்போன் மூலமாக பேசி போலீசாரை வரச் சொல் எனத்தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராம், உடனடியாக பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியேறியபோது தீ அந்த பகுதி முழுவதும் பற்றியுள்ளது. இதில், கல்யாணி நம்பியின் மீதும் ராமின் காலிலும் பெட்ரோல் பட்டு தீப்பிடித்துள்ளது. வெளியில் வந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். அப்போது கூட அறைக்குள் கல்யாணி நம்பி தீயில் எரிவதைப்பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ராம் தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட் நேரடி விசாரணை நடத்த உள்ளார். கல்யாணி நம்பி தனது முறைகேடு குறித்து விசாரணை நடத்திய ஆத்திரத்தால் அவரை, ராம் எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Madurai ,LIC ,Madurai LIC ,
× RELATED நீலகிரி மாவட்டம் அருகே லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையாளர் கைது