×

திருமணத்திற்கு இளம்பெண் தேவை பேனர் வைத்து தேடிய இளைஞர்கள்: சமூக வலைதளத்தில் வைரல்

திருமலை: திருமணத்திற்கு இளம்பெண் தேவை என்று திருமணமாகாத இளைஞர்கள் மாடு விடும் விழாவில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு குறைவு காரணமாகவும் பெண்கள் அதிகளவு படித்து வேலைக்கு செல்வதாலும், தங்களை விட வசதியானவர்கள், சம்பளம் அதிகம் வாங்குபவர்கள், வெளிநாட்டு இளைஞர்கள், அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை இளம்பெண்கள் வைத்து வருகின்றனர்.

இதனால் பல வாலிபர்கள் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்காக தற்போது ஏராளமான திருமண தகவல் மையங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த சில இளைஞர்கள் மாடு விடும் விழாவில் நூதன முறையில் திருமணத்திற்கு இளம்பெண் தேவை என்ற பேனர் வைத்துள்ளனர்.

அதுபற்றிய விவரம்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கலிகிரிப்பள்ளே கிராமத்தில் சங்கராந்தி பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மாடு விடும் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக மாடு விடும் விழாவுக்கு வருபவர்களை வரவேற்றுதான் பேனர் வைப்பார்கள்.

ஆனால் நேற்று இங்கு மாடு விடும் விழா போட்டி நடைபெற்ற பல்வேறு இடங்களில் அப்பகுதியில் திருமணம் ஆகாத இளைஞர்களின் போட்டோக்கள் வைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘‘திருமணத்திற்கு இளம்பெண்கள் தேவை” என்று தனது பெயர் ராசி, நட்சத்திரம் மற்றும் குடும்ப விபரங்களுடன் வைத்திருந்தனர். அவ்வாறு வைக்கப்பட்ட பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பேனர் சமூக வலைதளத்தில் வைரலாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirumala ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு சென்னை உள்பட 21...