ஆண்களுக்கு நிகரான உரிமையை பெண்களும் பெற வேண்டும் என்றால், அதற்கு கல்வியறிவு அடிப்படை தேவை என்றும், ஆண்களை போலவே பெண்களுக்கும் பொருளாதர சுதந்திரம் அவசியம் என்றும் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். பெண்களுக்கு சொத்துரிமை, அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, காவல்துறையில் பெண்கள் நியமனம், மகளிர் சுய உதவிக்குழு இயக்கம் என பல்வேறு முன்னெடுப்புகள் மூலம், மகளிர் வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியவர் கலைஞர்.
அவரது கொள்கை பாதையில் நடைபோடும் முதல்வர் தலைமையிலான இந்த அரசு, மகளிர் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பதவியேற்ற நாளன்றே முதல்வர் கையெழுத்திட்ட மகத்தான திட்டம் தான் ‘மகளிர் விடியல் பயணம்’ மகளிரின் பொருளாதார சுமையை குறைத்திடும் வகையில், கட்டணமில்லா பேருந்து போக்குவரத்துக்கு வழிவகுத்த அந்த ஒரு கையெழுத்தால், ஒரு பெண் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடவும், அவர்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட உயரிய திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இதன் மூலம் ஒரு கோடியே முப்பது லட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமை தொகையாக பெறுகின்றனர். மகளிரின் சமுக பங்களிப்பினை அங்கீகரித்து அவர்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்திட உதவும் இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக இதுவரை ரூ.33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
