கூடுவாஞ்சேரி: எஸ்ஐஆர் பணியால் சரிவர ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து கேட்டை இழுத்து மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றுத்துடன் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் கீரப்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சரிவர ஆசிரியர்கள் வரவில்லை என்றும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும், மேலும் நடுநிலை பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்காததை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடுநிலைப்பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடுநிலைபள்ளியை உயர்நிலை பள்ளியாக அரசு தரம் உயர்த்தியது.
இதில் நடுநிலைப்பள்ளி அருகே கீரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக் கென்று 5 ஏக்கர் கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டும் இதுவரை வகுப்பறைகள் கட்டப்படவில்லை. மேலும் கீரப் பாக்கத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 1760 வீடுகள் கொண்ட ஹவுஸிங் போர்டுக்கு என்று அந்த வளாகத்தில் ஆரம்பப்பள்ளி அமைக்கப்பட்டது.
இதில் ஆரம்பப்பள்ளி என்று எழுதி இருந்த பெயரை அழித்துவிட்டு அரசு அனுமதியின்றி உயர்நிலைப்பள்ளி என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹவுசிங் போர்டில் படிக்கவேண்டிய ஆரம்பப்பள்ளி மாணவர்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கும், அரசு நடுநிலை பள்ளியில் படிக்க வேண்டிய 6,7,8 மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களை ஹவுசிங் போர்டுக்கும் மாறி, மாறி அனுப்பி வைக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இதில் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் சட்டவிரோதமாக இயங்கும் கனரக லாரிகள் ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு அதி வேகமாக செல்வதால் உயிர் பயத்தில் மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை. ஏழு ஆசிரியர்கள் இருக்கவேண்டிய பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே வந்து செல்கின்றார்.
இதனால் மாண வர்களின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை உட்கார வைப்பது போன்று மேற்படி பள்ளியில் உட்கார வைக்கவேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த 5 மாதமாக பள்ளி தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
எனவே மாணவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளில் உயர்நிலைப்பள்ளி வரையிலும், ஹவுசிங் போர்டு வளாகத்தில் ஆரம்ப பள்ளிக்கென்று கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் ஆரம்ப பள்ளி இயங்கவும் பள்ளி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
இதனையடுத்து எஸ்ஐஆர் பணியை புறக்கணித்துவிட்டு வந்த ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, எஸ்ஐஆர் பணியால் எங்களை நசுக்குகின்றனர். இதனால் பள்ளிக்கு சரிவர போகமுடியவில்லை. மாணவர்களுக்கு சரிவர பாடமும் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர். ஒரு மணி நேரமாக அரசு பள்ளியின் கேட்டை இழுத்து மூடி தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் மாணவர்கள் ஏமாற்றத் துடன் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் இன்று காலை கீரப்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
