×

காரைக்குடி அருகே தேவாலய பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.81,000க்கு ஏலம்

காரைக்குடி: காரைக்குடி அருகே பாடத்தான்பட்டி அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவில் ஒரு கரும்பு 81,000 ரூபாய்க்கும், மற்றொரு கரும்பு 15,000 ரூபாய்க்கும் ஏலம் போனது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாடத்தான்பட்டி கிராமத்தில் பழமையான புனித வனத்து அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இதில், குழந்தை வரம் வேண்டி நிறைவேறியோர் கரும்பு தொட்டில் கட்டி நேத்திக்கடன் செலுத்துவது வழக்கம்.  விழா முடிவில் கரும்புகள் ஏலம் விடப்படும். ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா தை 4ம் தேதி தொடங்கியது. விழாவில் நேற்று மாலை ஆலயம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனித வனத்து அந்தோணியார், பாத்திமா மாதா தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பக்தர்கள் பலர் கரும்பு தொட்டில் கட்டி அதில் தங்களது குழந்தையை வைத்து ஆலயத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர் மலர் மாலை, பொரி உள்ளிட்ட பொருள்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். விழா நிறைவாக, பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட கரும்புகள் ஆலய வளாகத்தில் ஏலம் விடப்பட்டன.

இந்த ஆலயத்தில் கரும்பு ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும், குழந்தை வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால் பக்தர்கள் பலரும் ஏலத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதில், முதல் கரும்பு ரூ.81,000-க்கும் ஏலம்போனது. பாடத்தான்பட்டியை சேர்ந்த அருண் என்பவர் இந்த கரும்பை ஏலம் எடுத்தார். தொடர்ந்து, 2வது கரும்பை ஆரோக்கிய தாஸ் என்பவர் ரூ.15,000-க்கு ஏலம் எடுத்தார்.

Tags : Devalaya Pongal Festival ,Karaikudi ,Padathanpatti Antoniyar Temple Pongal Festival ,Holy Forest Anthony Temple ,Badathanpatty ,Karaikudi, Sivaganga District ,
× RELATED ஸ்ரீவில்லி. அருகே மேற்கு தொடர்ச்சி...