சென்னை: தமிழக காங்கிரசில், கட்சி ரீதியாக உள்ள 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. 3 மாதங்கள் வரை அவர்கள் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சரியாக செயல்படாவிட்டால் அவர்களை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. அடுத்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் பேரம் உள்ளிட்டவற்றிலும் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியும் வரும் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
திமுக உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி தலைமை 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரசில் ஒரு சிலர் கூட்டணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, வரும் தேர்தலில் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல, உள்கட்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது தனித்தனியாகவும் கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக பொது வெளியில் பேசும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக காங்கிரசில் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின்பு இதுவரை நிர்வாகிகள் யாரும் மாற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் மாற்றப்பட்டால் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என கருதி மாநில நிர்வாகிகள் மாற்றத்துக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கவில்லை. அதேநேரம், மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. அதாவது, திறமையான, தகுதியான மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, ‘சங்கதன் சிருஜன் அபியான்’ என்று ஒரு திட்டத்தை, காங்கிரஸ் மேலிடம் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தி உள்ளது.
டெல்லி மேலிடத்தில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பார்வையாளர் அனுப்பி வைக்கப்பட்டு, புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில், இத்திட்டம் வெற்றி பெற்றதால், அனைத்து மாநிலங்களிலும் அதே முறையை செயல்படுத்துவதில் ராகுல் உறுதியாக உள்ளார். தமிழக காங்கிரசில், அமைப்பு ரீதியாக 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். அதில் இறந்தோர், ராஜினாமா செய்தோர் என 12 மாவட்டத் தலைவர்கள் பதவிகள் காலியாக இருந்தன. அதனால், மாவட்டத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.அதற்கு, தமிழக காங்கிரசார் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், யாரையும் மாற்றக்கூடாது. தேர்தல் முடிந்த பின் மாற்றலாம் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனாலும், கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகம் வந்து மாவட்ட வாரியாக சென்று மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கினர். கட்சி ரீதியாக உள்ள 77 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்துக்கு தகுதியான 3 பேரை தேர்வு செய்தனர். அதற்கான பட்டியல் கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்ட தலைவர்கள் மாற்றம் இருக்காது என்றிருந்த நிலையில், நேற்றிரவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமித்து அதற்கான பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகி இருப்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் பலர் மாற்றப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பட்டியலின் படி, சென்னையில் உள்ள 7 மாவட்டங்களில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தவிர மற்ற அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு- கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு-எம்எம்டிஏ. கோபி, வட சென்னை கிழக்கு- மதரம்மா கனி, தென் சென்னை மத்தி- ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு-விஜயசேகர், தென் சென்னை மேற்கு- திலகர், செங்கல்பட்டு வடக்கு-செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு- பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்ட தலைவர்கள் என மொத்தம் இன்னும் 6 மாவட்டங்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘சங்கதன் சிருஜன் அபியான்’ என்ற திட்ட விதிகளின் படி, 3 மாவட்டங்கள் வரை புதிய மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும், இதில் சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்கள் உடனடியாக நீக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருப்பது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
