- ரஞ்சித்
- ECR
- திருக்குல்லரம்
- ஜனாதிபதி
- செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ்
- கல்பக்கம் இசிஆர் ரோட்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியை ஓ.வி.ரஞ்சித்துக்கு வழங்காததைக் கண்டித்து, இன்று காலை கல்பாக்கம் இசிஆர் சாலையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை சார்பில், நேற்று புதிய மாவட்ட தலைவர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே ஓதியூர் கிராமத்தை சேர்ந்த ஓ.வி.ரஞ்சித், முன்னதாக புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை கட்சி தலைமை வழங்கியது. இதனால் கட்சி தலைமையிடம் மிக நெருக்கமாகி, கட்சிப் பணிகளில் ஓ.வி.ரஞ்சித் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே, சமீபத்தில் தனக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி ஓ.வி.ரஞ்சித் விண்ணப்பித்திருந்தார். இவருக்கு மாவட்ட தலைவர் பொறுப்பை வழங்க கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் சம்மதித்திருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியான புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் பட்டியலில் ஓ.வி.ரஞ்சித்தின் பெயர் விடுபட்டிருந்தது. மேலும், வேறொருவருக்கு புதிய மாவட்ட தலைவர் பதவி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டித்து, இன்று காலை கல்பாக்கம் இசிஆர் நெடுஞ்சாலையில் ஓ.வி.ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு மறியலில் ஈடுபட்ட ஓ.வி.ரஞ்சித் ஆதரவாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஓ.வி.ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
