- சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- சத்யசீலன்
- குணா
- பாண்டமங்கலம்
- உமியூர், திருச்சி மாவட்டம்
- லீலா ஸ்ரீ
- பிரணவ் சபாரி
- சிவானி
- குணா, பெரம்பலூர்
பாடாலூர்: திருச்சி மாவட்டம் உறையூர் அருகே பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் மகன் குணா (38). இவரது மனைவி லீலா ஸ்ரீ. இவர்களுக்கு பிரணவ் சபரி (10) என்ற மகன், சிவானி (6)என்ற மகள் உள்ளனர். குணா, பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் பெரம்பலூருக்கு சென்றுவிட்டு, காரில் வீட்டிற்கு திரும்பி செல்வது வழக்கம். நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடித்துவிட்டு, காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதியது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த டீக்கடை முன்பக்கம் மீது மோதி, கிணற்றுக்குள் பாய்ந்தது. கார் கிணற்றுக்குள் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் கார் மோதி அடிப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் அவரின் உடலை பார்த்து, பாடாலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் திருச்சி மாவட்டம் நெய்குளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பது தெரியவந்தது. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கிருஷ்ணமூர்த்தி இறந்ததாக போலீஸார் கூறினர். ஆனால் இந்த விபத்திற்கு பின்னர், மற்றொரு விபத்து இருப்பது இன்று காலை தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த, டீக்கடை முன்பக்கம் உடைந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வாகன மோதி இருப்பதை உறுதி செய்தனர். மேலும் டீக்கடை அருகே இருந்த செடி, கொடிகளும் முறிந்து கிடந்ததால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அப்பகுதியில் இருந்த கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் ஆயில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது, கார் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர்தான் கிருஷ்ணமூர்த்தியின் மீது கார் மோதியதும், அந்த கார் தறிகெட்டு ஓடி வந்து, கிணற்றுக்குள் பாய்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர், கிரேன், மின் மோட்டார் உதவியுடன் காரை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் காரை மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குணா உடலை கைப்பற்றிய போலீஸார், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் குணா அதிவேகத்தில் காரை ஓட்டி வந்தபோது, கிருஷ்ணமூர்த்தியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று கிணற்றுக்குள் பாய்ந்ததில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்தை தொடர்ந்து சாலையோரம் திறந்த நிலையில் இருக்கும் கிணற்றிக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
