திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் கிடந்த 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை மீட்டனர். இவற்றை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கிவைத்து இருந்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (38). இவர் இன்று காலையில் தனது பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் சென்றுள்ளார். அப்போது ஆற்றின் கரையில் சில கற்சிலைகள் கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கொடுத்த தகவல்படி, ஊர் மக்கள் திரண்டு வந்தனர். இதன் பின்னர் அனைவரும் கூவம் ஆற்றின் கரையோரம் தேடியபோது அடுத்தடுத்து முருகர், விநாயகர் மற்றும் ஐயப்பன் சிலைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கிடப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர் அந்த சிலைகளை சேர்த்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட சிலர் சிலைகளை தொட்டு வணங்கினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவரது உத்தரவின்படி, வட்டாட்சியர் எஸ்.பாலாஜி தலைமையில் கடம்பத்தூர் போலீசார் விரைந்துவந்து விசாரித்தனர். இதன்பின்னர் பொதுமக்களிடம் இருந்து சிலைகளை மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த சிலைகள் எந்த கோயில்களில் திருடப்பட்டதா, வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்வதற்கு சிலை கடத்தல் கும்பல் பதுக்கிவைத்திருந்தார்களா என்று விசாரிக்கின்றனர்.
