×

போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில் சிக்கிய சஸ்பெண்ட் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு மேற்குவங்க அரசு கடிதம்

கொல்கத்தா: போலி வாக்காளர் சேர்க்கை விவகாரத்தில் சிக்கிய தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதை கைவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், மொய்னா மற்றும் பருய்பூர் கிழக்கு ஆகிய தொகுதிகளில் போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தேர்தல் பதிவு அதிகாரிகள் தேபோத்தம் தத்தா சவுத்ரி, பிப்லப் சர்க்கார் மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் ததாகதா மண்டல், சுதிப்தா தாஸ் ஆகிய நான்கு அதிகாரிகளும், சுராஜ் ஹால்டர் என்ற ஒப்பந்த கணினி பதிவாளரும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இவர்கள் ஐந்து பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிகாரிகளின் மீதான கிரிமினல் நடவடிக்கையை கைவிடக்கோரி நேற்று மேற்கு வங்க உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘நிர்வாக நடைமுறை தவறுகளுக்காக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. அவர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் துறை ரீதியான நடவடிக்கையே போதுமானது’ என்று சட்ட ஆலோசனையை சுட்டிக்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தால், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள மற்ற அதிகாரிகளின் மனநிலை பாதிக்கப்படும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசின் கோரிக்கை டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இவர்கள் மீது காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Election ,Commission ,Kolkata ,West Bengal government ,Election Commission ,West Bengal ,Moina ,Paruipur ,
× RELATED BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல்...