×

இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் 2 வீராங்கனைகள் தூக்கு போட்டு தற்கொலை: பயிற்சியின்போது கொடுமைகள் அனுபவித்ததாக எழுதிய உருக்கமான கடிதங்கள் சிக்கின

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் ‘சாய்’ விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த 2 வீராங்கனைகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளான பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் கோழிக்கோடு அருகே கடலுண்டி பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சாந்த்ரா (18), திருவனந்தபுரம் முதாக்கல் பகுதியைச் சேர்ந்த வேணு மகள் வைஷ்ணவி (15) ஆகிய மாணவிகள் தங்கியிருந்தனர்.

கபடி வீராங்கனையான வைஷ்ணவி கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும், தடகள வீராங்கனையான சாந்த்ரா பிளஸ் 1ம் படித்து வந்தனர். நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பின்னர் இரவில் இருவரும் வழக்கம் போல தங்களது அறைகளில் படுத்து தூங்கினர். நேற்று காலை 2 பேரும் பயிற்சிக்கு செல்லாததால் சக மாணவிகள் சென்று அறைக்கதவை தட்டிய போது திறக்க வில்லை.அதைத்தொடர்ந்து காவலாளிகள் வந்து அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்த போது 2 பேரும் அவர்களது அறைகளில் மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த கொல்லம் கிழக்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அறிந்ததும் கொல்லம் கலெக்டர் தேவிதாஸ், போலீஸ் கமிஷன் கிரண் நாராயணன் ஆகியோர் சாய் விடுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேரின் உடைகளிலும் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் சாய் விடுதியில் தாங்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sports Commission of India ,Thiruvananthapuram ,Chai ,Kerala ,SAI ,Kollah, Kerala ,
× RELATED நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில்...