திருமலை: சங்கராந்தி பண்டிகையொட்டி மருமகனுக்கு, மாமியார் வீட்டில் 158 வகையான உணவுகளுடன் தடபுடல் விருந்து வைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்திக்கு மாமியார் வீட்டிற்கு வரும் புது மருமகன்களுக்கு விருந்து வைப்பது ஒரு பாரம்பரியம். குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர் முரளி.
இவரது மனைவி கிருஷ்ணா. இவர்கள் தனது மகள் மவுனிகாவை ராஜமுந்திரியை சேர்ந்த ஸ்ரீதத்தா என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் (தலை) சங்கராந்தி பண்டிகையொட்டி ஸ்ரீதத்தா, தனது மனைவி மவுனிகாவுடன் நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, 158 வகையான இனிப்பு, காரம் என பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து முரளி- கிருஷ்ணா தம்பதியினர் விருந்து வைத்தனர்.
இதனைக்கண்டு மருமகன் ஸ்ரீதத்தா ஆச்சரியம் அடைந்தார். வீட்டிற்கு வரும் மருமகன்களுக்கு விருந்து வைக்கும் கோதாவரி மாவட்ட மக்களைபோல் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த தம்பதியும் அந்த பாரம்பரியத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருமகனுக்கு மாமியார் வீட்டில் விருந்து வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
