×

சாலை சீரமைக்கக் கோரி திடீர் மறியல் போராட்டம்

இடைப்பாடி, ஜன.10: இடைப்பாடி அருகே தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி மேல்புதூர் கிராம மக்கள் சாலையை சீரமைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இடைப்பாடி அருகே, தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி மேல்புதூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் விவசாய வேலைக்கு சென்று வருகின்றனர். வடக்குகாடு பஸ் ஸ்டாப்பில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ள மேல்புதூர் கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பழுதடைந்த சாலையை இதுவரை சீர்செய்யாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து நேற்று அங்குள்ள குமாரபாளையம்- இடைப்பாடி சாலையில் திரண்டனர். பின்னர், வடக்குகாடு பகுதியில் மாணவ- மாணவிகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேவூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து சங்ககிரி பிடிஓ முத்துசாமி சம்பவ இடம் சென்று ஒரு மாத காலத்திற்குள் சாலை அமைத்து சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Idipadi ,Maybudur ,Devur Point ,Malputur ,Andampatty Oratchi ,
× RELATED தினசரி, வாரச்சந்தை ஏலம் ரத்து