திருவிடைமருதூர், ஜன.8: திருவிடைமருதூர் தாலுகா எல்லைக்குட்பட்ட பந்தநல்லூர் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் இருந்து நான்கு லாரிகளில் மணல் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பந்தநல்லூர் காவல் நிலைய சரகம் முழையூர் பழவாறு பாலத்தில் சென்று சோதனை செய்தனர்.
அப்போது, நான்கு லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்தவர்களை மடக்கி பிடிக்க முற்படும்போது, லாரிகளை அப்படியே போட்டுவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, பந்தநல்லூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
