கீழக்கரை, ஜன.8: கீழக்கரையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கீழக்கரை போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்தான் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. சேதமடைந்த சாலையை கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ஷெஹானாஸ் ஆபிதா ஒப்புதல் படி இன்னும் 10 நாட்களுக்குள் சீரமைத்து தருவதாக நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உறுதி அளித்தார்.
தனியார் கல்லூரி விலக்கில் வேகத்தடை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரிடம், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், காவல் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் பேசியதன் படி இன்னும் 20 நாட்களுக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனடிப்படையில் வேகத்தடை அமையவுள்ள இடங்களை எம்பி நவாஸ்கனி, தனி உதவியாளர் பார்வையிட்டு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளரிடம் ஒப்புதல் பெற்றார். இவ்விரு கோரிக்கைகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து தருவதாக அளித்த உறுதிமொழியை ஏற்று கழுதைக்கு மனு அளிக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
