போபால்: மத்திய பிரதேசத்தில் காதலனை நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த ஷம்பு நவதே (25) என்பவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஜனவரி 3ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷம்பு, தனது நண்பர் ராவத் உய்கே (22) என்பவருடன் வந்து அந்தப் பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவரை நம்பிச் சென்ற அந்தப் பெண்ணை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ராவத் சென்ற பிறகு, ஷம்பு தனது மற்றொரு நண்பரான பங்கஜ் உய்கே (24) என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நடுக்காட்டில் தவிக்க விட்டுத் தப்பியோடினர். இதனால் மனமுடைந்த அப்பெண், மறுநாள் காலை தப்தி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆழம் குறைந்த பகுதியில் விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அம்ரபாலி தஹத் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐதராபாத் தப்பிச் செல்ல முயன்ற 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.
