×

மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பார்கர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு, ஒடிசா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டம் சோடா கிராமத்தில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி 5 வயது சிறுமியை மீன் பிடிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி பிரசாந்த் பாக் (21) என்ற இளைஞர் கடத்திச் சென்றார். பின்னர் அந்தச் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர், சிறுமியின் கழுத்தை பெல்ட்டால் நெரித்தும், தலையில் கல்லால் தாக்கியும் மிகக் கொடூரமாகக் கொலை செய்தார்.

ரத்தக் கறையுடன் வீட்டிற்கு வந்த அவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்த கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பார்கர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் மிகத் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், சம்பவம் நடந்த 20 நாட்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். 37 சாட்சிகள் மற்றும் டி.என்.ஏ ஆய்வறிக்கைகள் உள்ளிட்ட 55 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி கிரண் குமார் பிரதான், ‘இது அரிதிலும் அரிதான வழக்கு’ என்று குறிப்பிட்டு, குற்றவாளி பிரசாந்த் பாகிற்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அதாவது 14 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Odisha ,BARKER ,Soda, Barker District, Odisha State ,
× RELATED வீட்டில் டிவி பார்க்கும்போது தகராறு:...