சென்னை: ஹவாலா மூலம் தங்கக் கட்டிகளை வாங்கி ஏமாற்றிய வழக்கில் 2 போலீஸ் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் பணம் வாங்கிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் உடனடியாக பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மார்வாடி ஒருவர், தங்க கட்டிகளை வாங்கி, அதை நகையாக செய்து, தங்க நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். அவரிடம் ஒரு 9 பேர் கொண்ட ராஜஸ்தான் கும்பல், 15 கிலோவுக்கு மேல் நகைகளை வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை போலீசில் புகார் கொடுக்காமல், தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு துணை கமிஷனரைச் சந்தித்து நகை அல்லது பணத்தை வாங்கித் தர ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். அவரோ, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவில் தனது நண்பர்தான் அதிகாரியாக உள்ளார். எங்கள் இருவருக்கும் பறிமுதல் செய்யும் பணம் அல்லது நகையில் 15 சதவீதம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்களும் அதற்கு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு முகவரியை போட்டு, சில நாட்களுக்கு முன்னர் போலீஸ் கமிஷனராக இருந்த அபின் தினேஷ் மோடக்கிடம் புகார் கொடுக்கும்படி கூறியுள்ளனர். 2 போலீஸ் அதிகாரிகள் உடந்தையுடன் புகார் வருவது தெரியாமல், கமிஷனரும் புகாரைப் பெற்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் துணை கமிஷனர் வேல்முருகனின் நேரடி மேற்பார்வையில் உதவிக்கமிஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வந்தனர். முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சோதனைக்கான வாரண்ட் பெறப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
அதன்படி 10 கிலோ தங்கம், 2.7 கோடி ரொக்கம், 200 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அதிகாரிகள் அனுப்பி சிந்து என்பவரை கைது செய்து அவரது வீட்டில் சோதனையிட உத்தரவிட்டனர். இதனால் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சென்று சோதனையிட்டுள்ளார். வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கம், 80 கிராம் தங்கம் இருந்துள்ளது. ஆனால் பறிமுதல் செய்யாமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து குற்றவாளி சிந்துவிடம் பேரம் நடந்துள்ளது. அப்போது ரூ.40 லட்சம் கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கவும், நகை, பணத்தை பறிமுதல் செய்யாமல் விட்டு விடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதற்கு சிந்து சம்மதித்ததால் ரூ.23 லட்சம் முன் பணமாக வாங்கியுள்ளனர். புகார் தரப்பினரிடம் பணம் வாங்கியதுமல்லாமல், குற்றவாளிகளிடமும் பணம் வாங்கியுள்ளனர். இதற்கிடையில் தாம்பரம் பகுதியில் பணியாற்றிய ஒரு துணை போலீஸ் அதிகாரி 70 போலீஸ் அதிகாரிகள் மாறுதலில் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டார். இந்தநிலையில், அதிகாரிகள் பணம் வாங்கிய விவகாரம், புதிய கமிஷனராக பதவி ஏற்ற அமல்ராஜூக்கு தெரியவந்தது. இது குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார்.
குற்றவாளிகளிடம் வாங்கிய ரூ.23 லட்சத்தை உடனடியாக திருப்பி தராவிட்டால், இன்ஸ்பெக்டர் வரை உள்ள அதிகாரிகளை கைது செய்வேன். உயர் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்வேன் என்று எச்சரித்துள்ளார். இந்தச் சம்பவம் தாம்பரம் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாம்பரத்தைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை பகுதியில் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். ஏனெனில் நிலமோசடி, ரியல் எஸ்டேட் விவகாரம் என பல கோடி ரூபாய் மதிப்பு புகார்கள் வரும். இதனால் பணம் கொழிக்கும் பகுதிக்கு கடும் போட்டி ஏற்படும். தற்போதும் புகார் பள்ளிக்கரணை பகுதியில் இருந்துதான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
