திருச்செந்தூர், ஜன. 7: திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனிநபர் ஒருவரது குடியிருப்பு பின் பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த டவர் அனுமதியின்றி அமைக்கப்படுகிறது என்றும், மிகவும் நெருக்கமாக வீடுகள் உள்ள கடற்கரை தேரிப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பதால் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் 16வது வார்டு கவுன்சிலர் ஆனந்த ராமச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் ஈழவேந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
