×

தொழிற்சாலை பணிகளுக்காக சீன நிபுணர்களுக்கு விசா தளர்வு: ஒன்றிய அரசு புதிய இ-விசா அறிமுகம்

 

புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்னை காரணமாகத் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் சீனப் பணியாளர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மீண்டும் மேம்படுத்தும் நோக்கிலும், இந்தியத் தொழிற்சாலைகளின் உற்பத்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த காகித விசா முறை ரத்து செய்யப்பட்டு, சீனர்களுக்குப் பிரத்யேக மின்னணு விசா முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ‘இ-பி-4’ (e-B-4) எனப்படும் புதிய மின்னணு வணிக விசா கடந்த 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திரங்களை நிறுவுதல், பராமரிப்புப் பணிகள், தரக்கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்காகச் சீன வல்லுநர்கள் இந்தியா வர முடியும். இந்த விசா மூலம் அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படுவதுடன், பலமுறை வந்து செல்லும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் இதற்காக ‘NSWS’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், விசா விண்ணப்பங்கள் 45 முதல் 50 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தியா வந்த 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம்’ என்று ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Tags : Union government ,New Delhi ,India ,China ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி...