×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை: அறங்காவலர் குழு பேட்டி

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாக அறங்காவலர் குழு பேட்டி அளித்துள்ளது. இது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு பேசுகையில், ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30ம் தேதி வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர். நானும் நேரடியாக 2000 பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டேன் இதில் 93 சதவீதம் பக்தர்கள் முழு திருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்தனர். 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் 10 நாட்களில் ரூ 41.14 கோடி காணிக்கையாக செலுத்தினர்.

கடந்த ஆண்டு 6.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பக்தர்கள் கூடுதலாக வைகுண்ட வாயில் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு 6.47 லட்சம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறக்கூடிய நிலையில் அன்று 83 ஆயிரம் பக்தர்களும், 3 ம் தேதி சனிக்கிழமை அன்று 89 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. 44 லட்டுக்களை பக்தர்கள் பெற்று சென்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயார் செய்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 2000 போலீசார் 1150 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாமல் இருக்க திருப்பதி மற்றும் திருமலையில் ஐந்து மொழிகளில் 400 இடங்களில் வழித்தட விளம்பர போர்டுகளும் தகவல் ஒளிபரப்பு மூலம் மைக்குகள் மூலம் அறிவிப்புகளை அகப்பொழுது வழங்கப்பட்டு வந்தது. திருமலையில் மின் அலங்காரம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களுக்கு ஆயிரம் அன்னபிரசாத ஊழியர்களைக் கொண்டு பிரசாதங்கள் தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தோட்டத்துறையின் சார்பில் கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட கோவிந்தராஜ சுவாமி கண்காட்சி அரங்கம் பக்தர்கள் அனைவரையும் சிறப்பாக கவர்ந்தது. கோயிலுக்குள்ளும் வெளியிலும் 10 நாட்களுக்கு 50 டன் மலர்கள், 10 டன் பழங்கள், நான்கு டன் ரோஜா மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. 2.6 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலை முடிகளை காணிக்கையாக செலுத்தினர். 4,000 ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு சேவைகளை வழங்கினர். இதில் இ.ஓ. அனில்குமார் சிங்கால், கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி, எஸ்.பி. சுப்பாராயுடு, முதன்மை பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Swami ,Tirupathi Eumalayan Temple ,Andhra ,Annamayya Bhavan ,Tirumal ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...