சேலம், ஜன.5: சேலம் ஆத்தூர் உட்கோட்ட பகுதியில் சாலைப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆத்தூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ், பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாலைப்பணிகளான திடாவூர்- தம்மம்பட்டி வரை இடை வழித்தடத்திலிருந்து, இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல் பணியையும், புளியங்குறிச்சி, நூத்தாப்பூர் சாலை ஒருவழித்தடத்தை இடைவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல் பணியையும், கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, கல்லப்பட்டி,
வீரகனூர் சாலை வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல் பணியையும், கோட்ட பொறியாளர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார். மேலும், சாலையின் தரம் மற்றும் கன அளவுகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை ஆத்தூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப்பொறியாளர் அன்புசெழியன், உதவிப்பொறியாளர் ஓம்பிரகாஷ் மற்றும் இளநிலை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
