செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் கிராமம், வேதகிரீஸ்வரர் நகரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க மிக பழமையான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இந்த கோயிலில், நேற்றிரவு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைத்து வழிபாடுகளும் முடிந்த நிலையில், கோயிலை அர்ச்சகர்கள் பூட்டி விட்டு சென்றனர். பின்னர் இன்று அதிகாலையில் வழக்கம் போல் கோயிலை அர்ச்சகர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பிரகாரத்தில் இருந்த சிலைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான வில்வ மர ஊஞ்சல் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய நிலையில் எரிந்து கிடந்தன.
தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். சிசிடிவி காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், அங்கு கைரேகை நிபுணர்களுடன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயங்கள், கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
