சேலம்: சேலம் அருகே இன்று காலை தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதி தாய், மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி மானாத்தாள் அருகே உள்ள கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியம் (45). இவர்களது மகள் மஞ்சு (25). கடந்த 5 ஆண்டுக்கு முன் மஞ்சுவுக்கு திருமணமான நிலையில் 3 மாதத்தில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். தாய்,மகள் இருவரும் தினமும் கட்டிடம் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். இன்று காலை வழக்கம் போல் டிபன் பாக்சில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வேலைக்கு புறப்பட்டனர்.
காலை 9.30 மணி அளவில் வீட்டில் இருந்து அருகில் உள்ள முத்தம்பட்டிக்கு செல்வதற்காக ஓமலூர்-மேட்டூர் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர். ஒரு வளைவான பகுதியில் சென்றபோது மேட்டூரில் வந்து ஓமலூர் நோக்கி சரக்கு ரயில் வேகமாக வந்தது. அந்த நேரத்தில் அருகில் உள்ள இணை பாதை தண்டவாளத்தில் ஓமலூரில் இருந்து மேட்டூர் நோக்கி 2 ரயில் இன்ஜின்கள் சென்றன. அப்போது மேட்டூர் பாதையில் சரக்கு ரயில் வருவதை பார்த்த தாய் பாக்கியம், மகள் மஞ்சு அருகில் உள்ள இதைபாதை தண்டவாள பகுதிக்கு நடந்து வந்தனர். அப்போது அவர்கள் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி இருவரும் பலியாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்ஐ கோபண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிதறி கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி தாய் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
