புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மீனவரை கல்லால் அடித்து கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான 7 பேர் கும்பல் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (எ) ஐயனார் (40). மீனவரான இவருக்கு ஜெய என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 31ம்தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடிய செந்தில், சகோதரர் முத்துவேல் மற்றும் நண்பர்களுடன் வைத்திக்குப்பம் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப் (23), பாவிலன் (24) ஆகியோர், மதுபோதையில் பைக்கில் ஹார்ன் அடித்து வந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த திலீப், கல்லால் செந்தில் தலையில் அடித்த நிலையில் கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் முத்துவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் பாவிலன் (24), திலீப் (23), ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ்குமார் மற்றும் கருவடிக்குப்பம் திவாகர் உள்ளிட்ட 7 பேர் கும்பல் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். பின்னர் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து இருசக்கர வாகனகளின் ஹார்ன் அடித்துக் கொண்டு திலீப், பாவிலன் ஆகியோர் வைத்திக்குப்பம் வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் எதற்கு ஹார்ன் அடிக்கிறாய் என்று கேட்டு திலீப்பை அடித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து சென்ற திலீப் சிறிதுநேரத்தில் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு சஞ்சய் மற்றும் அவரது நண்பரை மிரட்டியுள்ளார். அப்போது சஞ்சயுடன் இருந்த நபரை திலீப் உள்ளிட்ட 3 பேர் தாக்கிய நிலையில், இதைப் பார்த்த அவ்வழியாக முத்துவேலுவுடன் வந்த செந்தில் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என செந்திலிடம், திலீப் கூறியுள்ளார். உடனே திலீப் உள்ளிட்ட 4 பேரையும் செந்தில் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலீப் மேலும் சில தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்துள்ளார். அப்போது செந்தில் மட்டும் தனியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது கல்லால் செந்தில் பின்பக்க தலையில் திலீப் தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்ததுடன், பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து செந்தில் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
