நெல்லை, ஜன.1: நெல்லை மாநகராட்சி, 3வது வார்டு இருதயநகரில் புதிய குடிநீர் இணைப்பு சேவையை முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். நெல்லை மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம், 3வது வார்டுக்கு உட்பட்ட இருதயநகர் பகுதி மக்கள் புதிதாக குடிநீர் இணைப்பு சேவை வழங்க வேண்டும் கடந்த 31 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட முன்னாள் மண்டல சேர்மனும், வார்டு கவுன்சிலரும், தச்சநல்லூர் தெற்கு பகுதி திமுக செயலாளருமான தச்சை சுப்பிரமணியன், இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்பேரில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு சேவையின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தச்சை சுப்பிரமணியன், புதிய குடிநீர் இணைப்பு சேவையை துவக்கிவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்வில் தச்சநல்லூர் மண்டல உதவி செயற்பொறியாளர் நாகராஜன், தொழில்நுட்ப உதவியாளர் மீரான் மைதீன், பங்குத்தந்தை மைக்கேல் ராஜ், ஏர்னெஸ்ட், தாமஸ், ரமேஷ், ஆஞ்சிஸ், சிவா, ஏ 1 அருண், இளைஞர் அணி மணிகண்டன் மற்றும் இருதய நகர் பகுதி மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
