சிவகாசி, ஜன. 1: விஸ்வநத்தம் ஊராட்சிக்கு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கட்ட வேண்டிய தொழில் வரி ரூ.90 லட்சம் நிலுவையில் உள்ளதால் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவகாசி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி என லட்சக்கணக்கில் நிலுவைத் தொகை உள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க ஊராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. பிடிஓக்கள் மீனாட்சி, பாண்டீஸ்வரன் ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலாளர் அருள்ராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலர்கள் விஸ்வநத்தம் பகுதியில் தீவிர வரிவசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி பாக்கி, வாடகை பாக்கி இருந்த பல கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். விஸ்வநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றுபவர்களின் தொழில்வரி சுமார் ரூ.90 லட்சம் நிலுவை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழில் வரியை வசூலிப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிவகாசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
பலமுறை நேரிலும் சென்று தொழில் வரி குறித்து கேட்டுள்ளனர். ஆனாலும் தொழில் வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி அலுவலர்கள் கூறும்போது, அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் மற்றும் ஊழியர்கள் என 326 பேரிடம் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தற்போது 2025ம் ஆண்டுவரை அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரி தொகையை எங்களது ஊராட்சி நிர்வாகத்திடம் செலுத்தவில்லை.
இது குறித்து சிவகாசி பணிமனை மற்றும் விருதுநகர் கோட்ட மேலாளரிடமும் பலமுறை கடிதம் கொடுத்துள்ளோம். இருந்த போதிலும் தொழில் வரி செலுத்தப்படாமல்தான் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
