சேலம்: ஏற்காட்டில் காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு, இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று 300 அடி பள்ளத்தில் தூக்கி வீசியது ஏன்? என கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (28), லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை கணவர் சண்முகம் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியாததால், ஏற்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார், இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடினர்.
இந்நிலையில் தனது மனைவி சுமதி, மாயமான விவகாரத்தில், அதே மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேஷ் (22) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக ஏற்காடு போலீசில் சண்முகம் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் நேற்று வெங்கடேசை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், தனக்கும், சுமதிக்கும் இடையே தகாத உறவு இருந்தது, அவரை கடந்த 23ம் தேதி கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி ஏற்காடு குப்பனூர் சாலையில் முனியப்பன்கோயிலை அடுத்த வளைவில் இருக்கும் 300 அடி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடம் சென்று 300 அடி பள்ளத்தில் இறங்கி, சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சுமதியின் சடலத்தை மீட்டனர். அழுகிய நிலையில் காணப்பட்ட அச்சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வெங்கடேசை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறியது: மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்த சுமதி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் பழக்கமாகியுள்ளார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகியநிலையில், நேரில் பார்த்து, நெருங்கியுள்ளனர். கணவர் அடிக்கடி லாரி டிரைவராக வெளியில் செல்வதால், இவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் அரை ஏக்கருக்கு காபி தோட்டம் வைத்துள்ள வெங்கடேஷ், தனது தோட்டத்திற்கு சுமதியை அடிக்கடி வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஓராண்டாக இப்படி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தநிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக சுமதி, வெங்கடேசின் போனை எடுப்பதை அவ்வப்போது தவிர்த்துள்ளார். இதனை நேரில் பார்த்து சுமதியிடம் கேட்டு வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார்.
மேலும், தனது போனில் உள்ள இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களையும், போனையும் லாக் போட்டு வைத்துள்ளார். அதனை அறிந்து, ஏன் இப்படி லாக் போட்டு வைத்திருக்கிறாய், உனக்கு வேறு நபர்களோடு தொடர்பு இருக்கிறதா என சந்தேகத்தில் கேட்டு தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று (23ம் தேதி) மதியம் சுமதியை தனது காபி தோட்டத்திற்கு வெங்கடேஷ் வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு ஏன் இப்படி செல்போனை லாக் போட்டு வைத்துள்ளாய், எனக்கேட்டு வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர், வெங்கடேசை திட்டி பேசியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை மட்டும் கழற்றி எடுத்துவிட்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் போட்டு கட்டியுள்ளார்.
பின்னர், தனது பைக்கில் சாக்குமூட்டை ஏற்றிக்கொண்டு வந்து, குப்பனூர் மலைப்பாதையில் முனியப்பன் கோயில் அருகே வளைவில் உள்ள பள்ளத்தில் இறங்கி, தூரமாக தூக்கி வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து கைதான வெங்கடேசை சேலம் ஜே.எம்.5 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். செல்போன் லாக் செய்யப்பட்டதால் வேறு நபர்களுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இன்ஸ்டா காதலியை கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி 300 அடி பள்ளத்தில் கள்ளக்காதலன் தூக்கி வீசிய இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாலி பார்சல் நாடகமாடி சிக்கிக்கொண்ட காதலன்
கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி, மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை காணவில்லை என கணவர் சண்முகம், ஏற்காடு போலீசில் புகார் கொடுத்துவிட்டு, தொடர்ந்து தேடி வந்தார். இச்சூழலில் 26ம் தேதியன்று மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு வந்த ஒரு பஸ்சின் டிரைவர், ஒரு பார்சலை அங்குள்ள மளிகைக்கடையில் கொடுத்து, சண்முகம் என்பவரிடம் வழங்க கூறியுள்ளார். அந்த மளிகைக்கடைக்காரர் சண்முகத்தை வரவழைத்து, பார்சலை கொடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே சுமதி அணிந்திருந்த தாலி இருந்துள்ளது. உடனே இதனை கொடுத்தனுப்பியது யார்? என அந்த டிரைவர் மூலம் சண்முகம் விசாரித்தார். அதில் தான், ரகசிய காதலன் வெங்கடேஷ் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. உடனே அவரிடம் சென்று, சண்முகம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், உன் மனைவி சுமதி, இந்த தாலியை கழற்றி கொடுத்துவிட்டு உன்னோடு வாழ முடியாது எனக்கூறி எங்கோ சென்றுவிட்டார். யாருடன் சென்றார்? எனத்தெரியாது, எனக்கூறியுள்ளார். அதற்கு உன்னிடம் எப்படி கொடுத்தார் என சண்முகம் கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்கு பின் முரணாக வெங்கடேஷ் பேசியுள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் கொண்டு, போலீசாரிடம் வெங்கடேசை பிடித்து விசாரிக்க கூறியுள்ளார். அதன்பேரின் விசாரிக்கும்போது தான், சுமதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தாலியை பார்சலில் அனுப்பி வைத்து, வேறு நபருடன் ஓடிவிட்டார் எனக்கூறினால் நம்பி விடுவார்கள் என எண்ணி அப்படி செய்ததாக போலீசில் கைதான கள்ளக்காதலன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
சடலத்தை மறைக்க 6 கி.மீ., தூரம் பைக்கில் கொண்டு சென்று வீச்சு
இன்ஸ்டா காதலி சுமதியை கொலை செய்ததும், சடலத்தை மறைக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அதற்காக சடலத்தை சாக்குப்பையில் போட்டு கட்டி, தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு வழியாக குப்பனூர் சாலையில் 6கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளார். அங்கு முனியப்பன் கோயில் அருகில் உள்ள பெரிய பள்ளத்தின் அருகில் பைக்கை நிறுத்தியுள்ளார். பிறகு சாக்குமூட்டையை தூக்கிக்கொண்டு, பள்ளத்தில் சிறிது தூரம் இறங்கி, பின்னர் தூக்கி வீசியுள்ளார். யாரும் சடலத்ைத கண்டு பிடித்து எடுத்துவிடக்கூடாது என்றும், போலீசுக்கு தெரியாமல் தப்பிவிடலாம் என்றும் இப்படி செய்ததாக கைதான வெங்கடேஷ் போலீசில் தெரிவித்துள்ளார். மேலும், தான் இதுவரையில் இன்ஸ்டா காதலி சுமதிக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருப்பேன், ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தார். அது எனக்கு ஆத்திரமூட்டியது எனவும் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
