×

பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலனுடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

*சடலத்துடன் போராட்டம்

திருமலை : பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால், காதலுடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், முனிகேபள்ளி மாணிக்நாயக் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(24). கட்பால் விட்டல்நாயக் தண்டா கிராமத்தை சேர்ந்தவர் காவேரி(23). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர்கள், தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஸ்ரீகாந்த், காவேரி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இருவரும் ஐதராபாத்தில் உள்ள பாலாபூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி காவேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவேரியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாலாபூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின் காவேரியின் சடலம் நேற்று முன்தினம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலத்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவேரியின் சடலத்தை ஸ்ரீகாந்த் வீட்டின் முன் வைத்து போராட்டம் நடத்தினர். ேமலும் காவேரியின் சாவுக்கு ஸ்ரீகாந்த்தான் காரணம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற காவேரியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சடலத்தை அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து காங்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Srikanth ,Munikesali Maniknayak Village, Sangareti District, Telangana State ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி