காட்டுமன்னார்கோவில், டிச. 30: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கண்டமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குமார் (39). இவர் தனது தாயார் லெட்சுமி பெயரில் வெடி விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்று குருங்குடி மெயின் ரோட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.இதனையடுத்து அங்கு சென்ற காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் கடையை ஆய்வு செய்தனர். அப்போது புத்தாண்டு விற்பனைக்காக மூட்டையில் கட்டி வைத்திருந்த நாட்டு வெடிகள், மின்னல் வெடி, குண்டு வெடி உள்ளிட்ட வெடிகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாட்டு வெடி மூட்டைகள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அனுமதி இன்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
