காரிமங்கலம், டிச.30: காரிமங்கலம் பேரூராட்சியில், பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிறுத்தும் இடம் மற்றும் பொதுமக்கள், பயணிகள் நிற்கும் பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1.14 கோடி மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் இருபுறமும் மேற்கூரையை நீடித்து அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக கான்கிரீட் அடித்தளம் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு பீடம் அமைக்கப்பட்டது.
கான்கிரீட் அடித்தளம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் பீடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனியார் வாகனங்கள், ஆட்டோ உட்பட பல்வேறு வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை நீடிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்வதுடன், ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
