×

முப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய ஆயுதப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான ரூ.79,000 கோடி மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகு ரக ரேடார்கள், பினாகா ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

லாய்ட்டர் வெடிமருந்துகள் முக்கிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும். அதே சமயம் குறைந்த உயர இலகுரக ரேடார்கள், சிறிய அளவிலான, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறிந்து அதனைக் கண்காணிக்கும். நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ராக்கெட்டுகள், அதிக தொலைவில் உள்ள இலக்குகளை திறம்படத் தாக்குவதற்கான பினாகா ரக ராக்கெட்டின் துல்லியத்தை மேம்படுத்தும். மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து அழிக்கும் அமைப்பு, உத்திசார் போர் பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவத்தின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும்.

மேலும், இந்திய கடற்படைக்காக, போலார்ட் புல் இழுவைப் படகுகள், உயர் அதிர்வெண் மென்பொருள் கொண்ட ரேடியோக்கள், மேன்பேக் மற்றும் நீண்ட தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு ஆகியவற்றை குத்தகைக்கு எடுப்பதற்கான தேவை அடிப்படையிலான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்காக, தானியங்கி பதிவு அமைப்பு, அஸ்ட்ரா மார்க் – 2 ஏவுகணைகள், சிமுலேட்டர் மற்றும் நீண்ட தூர வழிகாட்டுதல் கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

n ரூ.79,000 கோடி ஆயுத கொள்முதல் ஒப்புதலில் எம்க்யூ-98 ஆளில்லா விமானங்கள், அஸ்திரா மார்க்-2 ஏவுகணை அமைப்புகள், ஸ்பைஸ்-1000 வழிகாட்டு கருவிகள் வழங்கப்பட உள்ளன.
n அஸ்ட்ரா மார்க்-2 ஏவுகணைகள், இந்திய விமானப்படையின் போர் விமானங்களுக்கு நீண்ட தொலைவிலிருந்தே எதிரி விமானங்களைச் செயலிழக்கச் செய்யும் திறனை அதிகரிக்கும்.
n லாயிட்டர் வெடிமருந்துகள் எனப்படும் காமிகேஸ் டிரோன்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயன்படுத்தி பாகிஸ்தானின் பல டிரோன்களை அழித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Defence Ministry ,New Delhi ,Defence Ministry ,Indian Armed Forces ,Defence Acquisition Committee ,Union ,Defence Minister ,Rajnath Singh ,Delhi ,
× RELATED பயணிகளை ஈர்க்க கூடுதல் சலுகைகளை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!