- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திராவிட மாடல் 2.0 ஊராட்சி
- முதல்வர் எம்.எல்.ஏ.
- மேற்கு மண்டல திமுக பெண்கள் அணி மாநாடு
- கே. ஸ்டாலின்
- பல்லடம்
- மேற்கு
- மண்டலா திமுக
- பெண்கள் அணி
- மாநாட்டில்
- திருப்பூர் மாவட்டம்
பல்லடம்: தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும் என்று மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் நேற்று நடந்த ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்னும் திமுக மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் தலா 15 பேர் வீதம் மொத்தம் 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் மகளிர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமை தாங்கினார்.
மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது:
பெண்கள் இப்படி ஒரே இடத்தில் கூடியிருப்பது, வரலாற்றில் வேறு எங்கும் நடந்திருக்காது. உங்களை பார்க்கவே ஒரு பவர்புல் ஆக இருக்கிறது. பெண்கள் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. கனிமொழி, கவிஞர், பத்திரிகையாளர்கள், மரபு கலைகளில் ஆர்வம் கொண்டவர் என பன்முக தன்மை கொண்டவர். புன்னகை மாறாத முகம் கொண்டவர். அதே வேளையில், நாடாளுமன்றத்தில் சிங்கம்போல் கர்ஜிக்க கூடியவர். தேர்தல் என வந்துவிட்டால், திமுக தேர்தல் அறிக்கையில், முக்கிய பங்காற்றுவார். ஒவ்வொரு தேர்தலிலும், திமுக தேர்தல் அறிக்கைதான் எப்போதும் ஹீரோ. அந்த ஹீரோவை தயாரிக்கும் பொறுப்பை அவர் இப்போதும் ஏற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர்தான் தேர்தல் அறிக்கை தயாரித்து கொடுத்தார், வெற்றியும் பெற்றோம். அதுபோல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அவர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். நாம் மீண்டும் வெற்றி பெறுவோம்.
இப்போது இந்த மாநாடு எதற்கு? என சிலர் கேட்கிறார்கள். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரது வழியில் நாம் நடைபோடுகிறோம். திராவிட இயக்கத்தால் பெண்கள் அடைந்த வளர்ச்சியை, நீங்கள் எல்லோரும் மற்ற பெண்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். பெண்கள் படிக்க கூடாது, அடுப்படியை தாண்டி செல்லக்கூடாது என்றார்கள். ஆண்களை சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என அடிமைப்படுத்தினார்கள். அதை எல்லாம் உடைத்தது திராவிட இயக்கம்தான்.
இது மட்டுமா? தேவதாசி முறையை ஒழித்தோம். சட்டம் போட்டு பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தோம். பெண்களின் கல்வி உரிமை, சமூக உரிமைக்கு நாம் போராடி இருக்கிறோம். அதனால்தான் இவ்வளவு தூரம் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றம் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பெண்கள், மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானில் சில குழுக்கள் தடை போட்டனர். ஆனால், நம்ம ஊரில் ஆப்பிள் போன் அசெம்பிள் செய்கிறதே பெண்கள்தான். திராவிட இயக்கம் செய்த புரட்சியின் விளைவுதான் மகளிர் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். இன்று எல்லா கட்சியிலும் பெண்கள் பங்கு உள்ளது. அதற்கும், நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.
வளர்ந்த நாடுகளில்கூட பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் இன்னும் கிடைக்கவில்ல. ஆனால், தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தார் கலைஞர். இது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இப்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டையும் நாம்தான் கொண்டுவந்துள்ளோம். அதனால், தமிழ்நாட்டில் இப்போது பெண் மேயர்கள் தான் அதிகம். இந்த அதிகாரம், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கிடைக்க வேண்டும் என நாம் ேபாராடி வருகிறோம். இதுதான், திமுகவில் லட்சியம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 2017ல் போராட்டம் நடத்தினோம். ஒட்டுமொத்த இந்திய பெண்களின் குரலாக நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசினார். தேவையே இல்லாத நிபந்தனையோடு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய பா.ஜ அரசு நிறைவேற்றி உள்ளது. அதுவும், எப்போது நடைமுறைக்கு வரும் என சொல்ல முடியாத நிலை உள்ளது. ‘‘ஆபரேஷன் சக்சஸ், பேசண்ட் டெட்’’ என்பார்கள். அதுபோல், ஒன்றிய பா.ஜ அரசின் செயல்பாடு உள்ளது.
பெண்களுக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகாரம் கிடைப்பதை பாரதிய ஜனதா விரும்பவில்லை. அதனால், பெயரளவுக்கு இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பெண்களுக்கான ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டத்தில் எனது தாய்போல் நிறைய பேர் இருக்கிறார்கள். எனது சகோதரி போல் நிறைய பேர் இருக்கிறீர்கள். எனது மகள்களாக நிறைய பேர் இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் எது தேவை என பார்த்து, பார்த்து திட்டம் உருவாக்கி உள்ளோம். இன்னும் உருவாக்கி வருகிறோம்.
நாம், பெண்களின் முன்னேற்றத்துக்கு நிறைய பணி செய்துள்ளோம். அதை சொன்னால் நாட்கள் போதாது. ஆனாலும், இந்த மாநாட்டின் வாயிலாக சில முக்கியமான திட்டத்தை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமை பெண் திட்டம். இந்த திட்டங்கள். இந்த திட்டங்கள் நிறைய பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளது. நிறைய பெண்கள் சுயதொழில் துவங்குகிறார்கள். அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கபடும் காலை உணவு திட்டதால் வீட்டு பெண்களின் சமையல் அறை சுமையை குறைத்து உள்ளது.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. இதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதிலும் ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பத்தின் நான்கு, ஐந்து தலைமுறையை முன்னேற்ற முடியும். பெண்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அசையா சொத்து பதிவு செய்யும்போது, பதிவுகட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கி உள்ளோம். நமது ஆட்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதில், சரிபாதி பெண்கள் நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். ‘டி.என். ரைஸ்’ திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், அதிகபட்மசாக 13 சதவீதம் பெண்கள் தொழில் முனைவோராக உயர்ந்துள்ளனர். 1989ல் மகளிர் சுயஉதவி குழு துவக்கினோம். கால் வலிக்க வலிக்க பல மேடைகளில் நின்று ஆயிரக்கணக்கான மகளிருக்கு கடனுதவி வழங்கினேன். இப்போது 1 லட்சத்து 39 ஆயிரத்து 560 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளோம். பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக இதுவரை 19 தோழி விடுதிகள் உருவாக்கி உள்ளோம். மேலும் பல புதிய விடுதிகள் கட்டி வருகிறோம்.
இதுபோல் இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்ல நேரம் இல்லை. சுருக்கமாக சொன்னால், திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேற்றத்தில், தந்தை பெரியாரின் பதில்தான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதிலும். பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும். பெண்களுக்கான திட்டங்களை, திராவிட மாடல் அரசு போன்று, வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கான திட்டம் இன்னும் விரிவாக்கம் செய்யப்படும். ஆண்கள் வாசல்படி வரைதான் போய் பிரசாரம் செய்ய முடியும். ஆனால், பெண்கள் கிச்சன் வரை செல்லாம். ஒவ்வொரு வீட்டின் பெண்கள் மனதிலும் போக முடியும். நமது திட்டத்தை எல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இந்த ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என எடுத்துச்சொல்ல வேண்டும்.
மகளிர் அணியின் எல்லோரது பணியையும் நான் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். சோசியல் மீடியாவை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது சோசியல் மீடியா பணி இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். நான், கனிமொழிக்கு மட்டும் அண்ணன் அல்ல, உங்கள் எல்லோருக்கும் அண்ணன். திராவிட மாடல் ஆட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல 2.0 ஆட்சி தொடர வேண்டும். அதற்கான பணியை நீங்கள் இப்போதே செய்ய வேண்டும். பல்லடத்தில் ஒலிக்கிற இந்த குரல், தமிழ்நாடு முழுவதும் கேட்கட்டும். வெல்லும் தமிழ் பெண்களே, வெற்றியை தேடி தாருங்கள். அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
‘88% பெண்களுக்கு வாழ்வளித்த 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு இழுத்து மூடிவிட்டது’
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய பா.ஜ அரசு இழுத்து மூடியுள்ளது. கடந்த 4 ஆண்டில் இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களில் பெண்கள் 88 சதவீதம் பேர். பெண்களுக்கு வாழ்வளித்த இப்படிப்பட்ட திட்டத்தை ஒன்றிய பா.ஜ அரசு நிறுத்தியுள்ளது. இதனால், பணப்புழக்கம் அடிவாங்க போகிறது. ஒன்றிய பா.ஜ அரசு பெண்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்து ஊதுகிறார். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயர்த்தி உள்ளார்கள் என எடுபிடி பழனிசாமி பச்சை பொய் சொல்கிறார். புதிதாக உருவாக்கி உள்ள இந்த திட்டத்தில் மாநிலங்களின் நிதிச்சுமையை ஏற்றி உள்ளார்கள். இனி, 40 நாட்கள்கூட வேலை கிடைக்குமா? என்ற நிலை உள்ளது. எதையாவது படித்தால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு புரியும். எதையும் படிக்காமல், கமலாலயம் எழுதி கொடுப்பதை, அப்படியே எடப்பாடி பழனிசாமி படித்துவிட்டு போகிறார்.
- தேவதாசி முறையை ஒழித்தோம். சட்டம் போட்டு பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தோம்.
- பெண்களின் கல்வி உரிமை, சமூக உரிமைக்கு நாம் போராடி இருக்கிறோம். அதனால்தான் இவ்வளவு தூரம் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள்.
- மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
- கடந்த வாரம் பெண்கள், மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானில் சில குழுக்கள் தடை போட்டனர். ஆனால், நம்ம ஊரில் ஆப்பிள் போன் அசெம்பிள் செய்கிறதே பெண்கள்தான்.
- தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தார் கலைஞர். இது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இப்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- பெண்களுக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகாரம் கிடைப்பதை பாரதிய ஜனதா விரும்பவில்லை.
