×

திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் சுக்லா (27) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் நண்பர் போல பழகி, அவர்களின் 21 வயது மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாகல்குண்டே பகுதியில் சுமார் 18 மாதங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து (லிவ்-இன்) வாழ்ந்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் அப்பெண்ணின் வீட்டில் இருந்து சிறுகச் சிறுக 550 கிராம் தங்க நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணின் 16 வயது தங்கையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 1.5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். சுபம் சுக்லா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், தனது 16 வயது தங்கையிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. உண்மை தெரிந்ததால் ஆத்திரமடைந்த சுக்லா, அப்பெண்ணை 4 மாதங்கள் இருட்டறையில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியதுடன், பணம் தீர்ந்ததும் வீட்டிலிருந்து துரத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகச் செயல்பட்டு, செல்போன் லொகேஷன் உதவியுடன் சதாசிவநகர் சாங்கி டேங்க் பகுதியில் பதுங்கியிருந்த சுக்லாவைக் கண்டுபிடித்து போலீசில் தகவல் அளித்தார். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பாகல்குண்டே போலீசார், சுபம் சுக்லா மீது திருட்டு மற்றும் மோசடி வழக்கும், சிறுமியைச் சீரழித்ததற்காகப் போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அவரது ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bangalore ,Bangalore Police ,Subam Shukla ,Rajasthan ,
× RELATED வடமாநில நபரை அரிவாளால் தாக்கி ரீல்ஸ் எடுத்த 4 சிறார்கள் கைது!