திருவனந்தபுரம்: இந்தியா-இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி20தொடர் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 2 போட்டி மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்த 3வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்று 3-0 என தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 4வது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா பேட்டிங், பந்துவீச்சில் வலுவாக உள்ளது. ஷபாலி வர்மா 157, ஜெமிமா 104 ரன் அடித்துள்ளனர்.
பவுலிங்கில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா தலா 4 விக்கெட் எடுத்துள்ளனர். இன்றும் வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. அணியில் புதிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். மறுபுறம் சாமரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியுடன் பரிதாப நிலையில் உள்ளது. இந்திய அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றாலே பெரிய சாதனை என்ற நிலையில் தான் உள்ளது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மந்தனா இன்று 27 ரன் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன் இலக்கை எட்டுவார். இந்தியாவின் மித்தாலி ராஜ் 10,868, சுசி பேட்ஸ் 10,652 இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்னை தாண்டி உள்ளனர். மந்தனா 3 போட்டியில் 40 ரன்தான் அடித்துள்ளார். இன்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல் தீப்தி சர்மா இன்று ஒரு விக்கெட் எடுத்தால் சர்வதேச டி.20 போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைக்கலாம்.
