×

மெல்போர்னில் மெல்ல திறந்தது கதவு; இரண்டே நாள்… இங்கிலாந்து தூள்: 4ம் டெஸ்டில் ஆஸியை புரட்டி எடுத்து வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, போட்டியின் 2ம் நாளிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை சுவைத்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, மெல்போர்ன் நகரில் 4வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் 152 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடியபோது, ஆஸி பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துகளை வீசி இங்கிலாந்தை 110 ரன்னுக்கு சுருட்டி அசத்தினர். ஒரே நாளில் இரு அணிகளும் 20 விக்கெட்டுகளை தொலைத்த நிலையில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி, விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 2ம் நாளில் 2ம் இன்னிங்சை ஆஸி தொடர்ந்தது.

இம்முறையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ், புத்தெழுச்சியுடன் பந்துகளை வீசி ஆஸி அணியை மிரட்டினர். அவர்களின் மந்திர பந்துகளில் டிராவிஸ் ஹெட் (46 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பியதால், 34.3 ஓவரில் 132 ரன்னுடன் ஆஸி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (37 ரன்), பென் டக்கெட் (34) ரன் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தனர். பின் வந்த வீரர்களில், ஜேகப் பெத்தேல் 40, ஜோ ரூட் 15, ஹேரி புரூக் ஆட்டமிழக்கமல் 18 ரன் எடுத்தனர். அவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து 32.2 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 178 ரன் எடுத்தது. அதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகத்தான வெற்றியை, போட்டியின் 2ம் நாளிலேயே பதிவு செய்து சாதனை படைத்தது.

* சாதனைகள் பலவிதம் ஒவ்வொன்றும் புதுவிதம்

* மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து அணி பெற்ற வெற்றி, பல்வேறு சாதனைகளை அரங்கேற்றி உள்ளது.

* ஆஸ்திரேலியாவில் ஆடிய 18 போட்டிகளில் 16ல் தோற்றும் 2ல் டிரா செய்தும் துவண்டு போய் இருந்த இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் வகையில் 4வது போட்டியின் வெற்றி அமைந்துள்ளது.

* ஆஸி மண்ணில் 18 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தற்போது இங்கிலாந்து வெற்றியை சுவைத்துள்ளது.

* மெல்போர்ன் டெஸ்ட் போட்டி, வெறும் 852 பந்துகளில் முடிவுக்கு வந்துள்ளது. ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில், 4வது மிகக்குறைந்த பந்துகளில் முடிந்த போட்டி இதுவாகும்.

* இதற்கு முன், ஓல்ட் டிராஃபோர்டில், 1888ல் 788 பந்துகளில் முடிந்த போட்டியில் இங்கிலாந்தும், அதே ஆண்டில், லார்ட்ஸ் மைதானத்தில் 792 பந்துகளில் முடிந்த போட்டியில் ஆஸியும் வென்றுள்ளன.

* நடப்பு தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நடந்தது. அதில், 847 பந்துகளில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது.

* ஆஷஸ் தொடரில், 1888 (லார்ட்ஸ்), 1888 (தி ஓவல்), 1888 (மான்செஸ்டர்), 1890 (தி ஓவல்), 1921 (நாட்டிங்காம்), 2025 (பெர்த்), 2025 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் 2 நாளில் முடிவுரை எழுதப்பட்டுள்ளது.

Tags : Melbourne ,England ,Aussies ,Australia ,Ashes… ,
× RELATED துபாயில் நாளை காட்சி போட்டியில் ஆஸ்திரேலிய வீரருடன் மோதும் சபலென்கா