×

கிளை சிறையின் சுவர் ஏறி குதித்து பலாத்கார கொலை கைதிகள் மூன்று பேர் தப்பி ஓட்டம்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

 

உஜ்ஜைனி: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி சிறையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கொலை மற்றும் பாலியல் குற்றவாளிகள் மூன்று பேர் ஏணியைப் பயன்படுத்தி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள கச்ரோத் கிளை சிறைச்சாலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கோவிந்த் (35), பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கில் கைதான நாராயண் ஜாட் (31) மற்றும் கடத்தல் வழக்கில் சிக்கிய கோபால் (22) ஆகியோர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று சிறையில் வர்ணம் பூசுதல் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

இதில் ஈடுபட்டிருந்த இந்த மூன்று கைதிகளும், பணிக்காக வழங்கப்பட்ட மடிப்பு ஏணியைப் பயன்படுத்தி சுமார் 12 அடி உயரமுள்ள சிறை மதில் சுவரில் ஏறி குதித்துத் தப்பியோடினர். மாலை 5.45 மணியளவில் வழக்கமாக நடைபெறும் கைதிகள் கணக்கெடுப்பின் போது இவர்கள் மாயமானது கண்டு சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.சிறை வளாகத்தில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததே கைதிகள் தப்பிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் வார்டின் சாவியைப் பயன்படுத்தி அவர்கள் ஏணியை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தப்பியோடிய பயங்கர குற்றவாளிகள் மூன்று பேரையும் பிடிக்க உஜ்ஜைன் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறைக் காவலர்களின் கண்காணிப்பில் ஏற்பட்ட அலட்சியம் குறித்தும், பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்தும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madhya Pradesh ,Ujjain ,Kachrod ,Madhya Pradesh… ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் ஆன்லைன் வணிக...