×

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத அன்புமணி என்னை எப்படி நீக்க முடியும்: ஜி.கே.மணி பேட்டி

 

சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக என்றால் ராமதாஸ்தான் அடையாளம். 25 ஆண்டுகள் தலைவராக இருந்தேன். மனிதநேயமுள்ள, மனித பண்புள்ள மனிதருக்கு இதுபோன்ற சிந்தனை வருமா. அன்புமணியை கட்சிக்கு கொண்டு வந்ததே நான்தான்.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணியை அதிரடியாக நீக்கி அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அந்த பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும், பாமக செயல் தலைவராக தனது மகள் காந்திமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.

அதேபோல், கட்சிக்கு தலைவர் நான் தான் என அறிவித்துக்கொண்ட அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றார். இதையடுத்து, இரண்டு பிரிவுகளாக உள்ள பாமகவின் சின்னமான மாம்பழம் யாருக்கு என்பதில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு நீதிமன்றம் சென்றுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவர்களுக்கு இடையில் இணைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் ஆதரவாளரான மூத்த நிர்வாகியும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, அன்புமணிக்கு எதிராக தொடர்ந்துபேசி வந்தார். இந்தநிலையில் அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை நிலைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், ஜி.கே.மணி நீக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத அன்புமணி என்னை எப்படி நீக்க முடியும் என்று ஜி.கே.மணி பேட்டி அளித்துள்ளார். 1980ல் பாமக ‘தொடங்கப்பட்டது முதலே ராமதாஸ் உடன் இருந்து வருகிறேன். அன்புமணி கட்சிக்கு வரும் முன்பே நான் பாமகவில் இருந்து வருகிறேன். அன்புமணியை அரசியலில் கொண்டுவர ராமதாஸிடம் சண்டை போட்டவன் நான். கட்சியில் அன்புமணிக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்? அமைச்சராக காரணம் யார் என்று ஜி.கே. மணி பேட்டி அளித்துள்ளார்.

 

Tags : ANBUMANI ,G. ,Chennai ,Anumani ,Palamaka ,Ramadasthan ,
× RELATED 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி; சூரிய...