×

ஸ்டாலின் இருக்கும் வரை, திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது: முதலமைச்சர் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையில்; “திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுவது போன்ற அரசு அல்ல இது. மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய திறன் கொண்டது திமுக அரசு. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.

பொருளாதார வளர்ச்சி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். உளுந்தூர்பேட்டையில் உருவாகி வரும் காலணி ஆலை மூலம் 20000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்டாலின் இருக்கும் வரை திமுக ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்துக்கு இடம் கிடையாது. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் நாட்களில் கேக், பிரியாணி எங்கே என்று மக்கள் உரிமையுடன் கேட்கின்றனர். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடியவர்களுக்கு இஸ்லாமியர்கள் ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். தை முதல்நாளன்று தேவாலயத்தில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்.

எம்மதமும் சம்மதம் என்ற தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்தான் பாஜக கண்களை உறுத்துகிறது. ஒன்றிய அரசின் தரவரிசைகளில் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்மதான். நெஞ்சை நிமிர்த்தி, காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இதில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது எனது ஓபன் சேலஞ்ச்; தைரியம் இருந்தால் சொல்லுங்கள்” என உரையாற்றினார்.

மேலும் கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரூ.18 கோடியில் உளுந்தூர்பேட்டை அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் அமைக்கப்படும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சிப்காட் தொழிற்பேட்டை ரூ.10 கோடியில் அமைக்கப்படும். புதுப்பாலப்பட்டி கிராமத்தில் ரூ.18 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடியில் புதிய தீயணைப்புத்துறை கட்டடம் கட்டப்படும். கல்வராயன்மலை பகுதியில் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்படும். 120 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குடியிருப்புகள் அமைக்கப்படும் போன்ற 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tags : Stalin ,Dimuka ,Chief Minister of ,Kallakurichi District ,K. Stalin ,Government Welfare Scheme Awards Ceremony ,Dravitha ,
× RELATED வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட...