×

முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு

 

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவில், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்குமாறு பெரியபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : BAVARIA PIRATES ,MINISTER ,SUDARSANAM ,Chennai ,Thiruvallur District ,Kummidipundi Adamuka ,M. L. A. Sudarsanam ,Vaga ,Tanakulam ,Beriyapaliam ,
× RELATED இந்தியாவில் சிறுவர்கள் இன்டர்நெட்...