×

மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல வங்கதேச மக்களுக்காக தனித்திட்டம் உள்ளது: லண்டனில் இருந்து திரும்பிய தாரிக் உரை

 

டாக்கா: வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கடந்த 2024ம் ஆண்டு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், ஊழல் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் புகலிடம் தேடி வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று டாக்கா விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, மனைவி ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தரையிறங்கியதும் காலணிகளை கழற்றிவிட்டு தாய்மண் மீது நடந்து முத்தமிட்ட அவர், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸிடம் தொலைபேசியில் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து டாக்காவின் பூர்பாசால் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தாரிக் ரஹ்மான் கலந்து கொண்டார். வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும் அவர் பேசும்போது, ‘மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல வங்கதேச மக்களுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது.

மத வேறுபாடின்றி இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகச் சென்று வீடு திரும்பும் சூழலை உருவாக்குவதே எனது லட்சியம்’ என்று தெரிவித்தார். மேலும், மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, சதித்திட்டங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்குமாறு தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த இந்த கூட்டத்தால் வங்கதேச அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Tags : Martin Luther King ,Tariq ,London ,Dhaka ,Tarik Rahman ,Bangladesh Nationalist Party ,Sheikh Hasina ,Bangladesh ,
× RELATED வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம்...