×

விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு ஈரானில் வீதிகளில் மக்கள் போராட்டம்: துணை ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி

துபாய்: ஈரானின் நாணய மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மேற்காசிய நாடான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படியே தற்போதும் ஆட்சி நடந்து வருகிறது. ஈரான் அதிபராக தற்போது மசூத் பெசெஷ்கியான் பதவி வகித்து வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ஈரான் கடந்த பல ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும், கடந்த டிசம்பர் 28ம் தேதி, ஈரானிய நாணயமான ரியால், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக பெரும் வீழ்ச்சி அடைந்தது.

பொருளார நெருக்கடி, நாணய மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நிலைமை மோசமடைந்ததால், ஈரான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா பர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக ஈரான் முன்னாள் நிதியமைச்சர் அப்துல் நாசல் ஹெம்மாட்டி மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 5வது நாளாக நேற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. மேற்கு மாகாணத்தில் நடந்த போராட்டத்தில் ஈரான் நாட்டின் புரட்சிகர காவல்படையை சேர்ந்த தன்னார்வ வீரர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 13 பேர் காயமடைந்தனர்.

Tags : Iran ,Dubai ,Islamic Republic ,Iran… ,
× RELATED வங்கதேசத்தில் தொடர் அட்டூழியம்...