×

ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும் போதும், ‘நிச்சயம் அங்கு போக வேண்டுமா?’ என்று யோசிப்பேன்- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: “டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே தங்கினாலும், அதீத காற்று மாசு காரணமாக, எனக்கு நோய்த் தொற்றுகள் வந்துவிடுகின்றன. ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும் போதும், ‘நிச்சயம் அங்கு போக வேண்டுமா?’ என்று யோசிப்பேன். காற்று மாசு அவ்வளவு மோசமாக உள்ளது” என ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, “நான் டெல்லிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கினாலே எனக்குத் தொற்று (Infection) ஏற்பட்டு விடுகிறது. அந்த அளவிற்கு இங்கே காற்று மாசு அபாயகரமாக உள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற முறையில் நானே இதை ஒப்புக்கொள்கிறேன்; டெல்லியின் காற்று மாசுபாட்டில் 40 சதவீதம் வாகனப் புகையால்தான் ஏற்படுகிறது,” என்று தெரிவித்தார்.

நாட்டின் இறக்குமதியைக் குறைப்பதே உண்மையான தேசியவாதம் என்று குறிப்பிட்ட அவர், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு குறித்துப் பின்வருமாறு கூறினார்: “இந்தியா ஆண்டுதோறும் சுமார் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இவ்வளவு பணம் செலவழித்து, நமது சொந்த நாட்டையே நாம் மாசுபடுத்துகிறோம். இது என்ன மாதிரியான தேசியவாதம்? இதற்குப் பதில் உயிரி எரிபொருட்களை பயன்படுத்தி நாம் ஏன் ‘ஆத்மநிர்பர் பாரத்’தை (சுயசார்பு இந்தியா) உருவாக்கக் கூடாது?”

மாற்று எரிபொருளின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், தாம் அந்த நிகழ்ச்சிக்கு 100% எத்தனாலில் இயங்கும் ‘இன்னோவா’ காரில் வந்ததைச் சுட்டிக்காட்டினார். இந்த கார் பூஜ்ஜிய சதவீத மாசுபாட்டை வெளியிடுவதோடு, 60% மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் சூழலில் அமைச்சரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags : Delhi ,Union Minister ,Nitin Khatkari ,
× RELATED மூளைச்சாவு அடைந்த இனைஞரின் பிற...