நன்றி குங்குமம் தோழி
இந்தியா விளையாட்டுத் துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் தொடர் வெற்றிகளை குவித்துள்ளனர். 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாலத்தீவில் உள்ள மாலேவில் நடைபெற்றது. 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். ஒற்றையர், இரட்டையர், குழு ஆகிய மூன்று பிரிவுகளிலும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்திய மகளிர் அணியை சேர்ந்த கீர்த்தனா ஒற்றையர், இரட்டையர், குழு ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தந்தை இழப்பு, கல்வி இடைநிற்றல், வறுமை போன்ற சூழ்நிலைகளிலும் கேரம் கனவுடன் பயணித்து கேரம் உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள கீர்த்தனாவிடம் பேசியபோது…
“நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் எனக்கு கேரம் விளையாட்டில் ஆர்வம் வந்தது. என் அப்பா ஒரு கேரம் பிளேயர். ஆரம்ப காலக்கட்டங்களில் அவரே எனக்கு கேரம் விளையாட கற்றுக்கொடுத்தார். அவரால்தான் நான் தொடர்ந்து கேரம் விளையாட ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் கேரம் கோச்சிங் அகாடமியில்தான் எப்போதும் கேரம் விளையாட்டுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன். நான் சிறப்பாக விளையாடுவதாக பலரும் பாராட்டுவார்கள்.
முதலில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன். பின்னர் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற்றேன். நான் சிறப்பாக கேரம் விளையாடுவதை பார்த்த தமிழ்நாடு கேரம் சங்கத்தின் செயலாளர் மரிய இருதயம் என்னை பாராட்டி எனக்கு ஊக்கம் அளித்தார். கேரம் பயிற்சி… போட்டிகள்… பரிசுகள் என்று நான் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் 2017ம் ஆண்டு என் வாழ்வில் மீள முடியாத துயர சம்பவம் நடந்தது.
என் தந்தையை நான் இழந்தேன். அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே வறுமையில் இருந்த என் குடும்பம் அப்பாவின் இழப்புக்கு பின் மேலும் கடும் வறுமையை சந்தித்தது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால், அம்மாவும் கடினமாக உழைக்க ஆரம்பித்தார். அவருக்கு துணையாக நான் படிப்பை இடைநிற்றல் செய்துவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். கேரம் பயிற்சியிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை” என்ற கீர்த்தனாவின் கேரம் கனவு அத்துடன் முடிந்தது என்ற நிலையில், கேரம் பயிற்சியாளர் நித்யராஜ் கொடுத்த ஊக்கம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
“எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்த எனக்கு மீண்டும் கேரம் விளையாடும் ஆர்வம் எட்டிப் பார்த்தது. தினமும் வேலை முடித்து வந்ததும் குறைந்தது அரை மணிநேரமாவது பயிற்சி செய்வேன். நான் மீண்டும் கேரம் பயிற்சி செய்வதைப் பார்த்த பயிற்சியாளர் நித்யராஜ் எனக்கு உறுதுணையாக இருந்து விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தது.
என் குடும்பச் சூழல் அதை அனுமதிக்காது என்பதால் போட்டியில் பங்கு பெற முடியாது என்று பயிற்சியாளரிடம் கூறினேன். ஆனால், அவர் எனக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு எனக்கு உதவினார். அடுத்தடுத்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதன் மூலம் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. உலக சாம்பியன் போட்டி அறிவிப்பு தெரியவந்ததும் சந்தோஷமடைந்தேன். ஆனால், அதற்கு ஒரு லட்சம் செலவாகும் என்று தெரிந்ததும் சோர்ந்து போனேன்.
என் பயிற்சியாளர் உதவியுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன். அவர் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்த்தி அனுப்பினார். உலக சாம்பியன் போட்டிக்காக மரிய இருதயம் சார் எனக்கு சிறப்பு பயிற்சியினை அளித்தார். மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனத்துடன் விளையாடி ஒற்றையர், இரட்டையர், குழு ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று, உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றேன்.
நான் துவண்டு போயிருந்த நிலையில் எனக்கு கை கொடுத்து உயர்த்திவிட்ட பயிற்சியாளர் நித்யராஜ், தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயம், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டின் வறுமை சூழலிலும் என்னை விளையாட ஊக்கப்படுத்திய என் அம்மாவுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். நான் எவ்வளவு நேரம் பயிற்சி செய்து கொண்டிருந்தாலும் என்னை எதுவும் கேட்கமாட்டார். நான் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இப்போது என் வெற்றியை கண்டு மகிழ்கிறார். என் அம்மாவின் கனவை நிறைவேற்றவும் எங்க வறுமையின் சூழல் மாறவும் நான் தொடர்ந்து கேரம் விளையாடுவேன்” எனும் கீர்த்தனா, தான் வென்ற பதக்கம் மற்றும் கோப்பைகளை பார்வையாக வைக்கக்கூட அவரின் வீட்டில் இடவசதியின்றி, பயிற்சி செய்யும் இடத்திலேயே வைத்திருப்பதாக தெரிவித்தார்.
“கீர்த்தனா சிறு வயது முதலே திறமையாக கேரம் விளையாடுவார். தந்தையின் இழப்புக்கு பின் கேரம் விளையாட்டில் தொய்வில் இருந்தவரை ஊக்கமளித்து மீண்டும் விளையாட வைத்தேன்’’ என்று பேசத் துவங்கினார் கீர்த்தனாவின் பயிற்சியாளர் நித்யராஜ். ‘‘பயிற்சி தொடர்ந்து எடுத்து வந்தவர் தேசிய அளவிலான போட்டியில் மூன்றாவது இடத்தில் வெற்றிப் பெற்றார். கீர்த்தனாவின் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அவருக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கினார்கள்.
அவரின் குடும்பச்சூழல் காரணமாக அவரால் தொடர்ந்து வெற்றியினை கொடுக்க முடியாமல் போனது. விளையாட்டிலும் தொய்வு ஏற்பட்டது. அப்போது நான் அவரிடம், ‘உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் நீ இழந்து நிற்கிறாய், இனிமேல் உன் வெற்றி பெருசா இருக்கணும். உன் ஆட்டம் தீவிரமாக இருக்கணும்’ என்று அறிவுரை அளித்தேன். தொடர் வெற்றிக் கொடுத்தால்தான் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டவர் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார். அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பயிற்சி செய்வார். உணவு இடைவேளைக்கு மட்டுமே வீட்டுக்குச்செல்வார். மற்ற நேரங்கள் அகாடமியில்தான் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்.
இதன் பலனாக மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்றார். தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 52வது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று டைட்டிலே வின்னர் பட்டம் வென்றார். இதன் பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிப்பெற்று, அதில் பங்கேற்று இன்று உலகக் கோப்பையுடன் நிற்கிறார். கீர்த்தனாவின் இந்த வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. வறுமையான குடும்பச்சூழல், தந்தையின் இழப்பு என அனைத்தையும் கடந்துதான் வெற்றிப்பயணத்தை தொடர்ந்திருக்கிறார் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. எங்க அகாடமியில் கேரம் பயிற்சி பெற்றுவரும் சிறுவர்களுக்கு கீர்த்தனா பயிற்சி அளித்து வருகிறார். சென்னையின் இப்பகுதியிலிருந்து நிறைய கேரம் சாம்பியன்கள் உருவாக வேண்டும்” என்றார் பயிற்சியாளர் நித்யராஜ்.
செய்தி: ரம்யா ரங்கநாதன்
படங்கள்:ஆர்.சந்திரசேகர்
