நன்றி குங்குமம் தோழி
தென்னிந்தியாவின் முதல் டால்பி சினிமா
இன்றைய தேதியில் ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு சவால் விடக்கூடிய திரையரங்கம், டால்பி சினிமாதான். வண்ணங்களை மிகத் துல்லியமாக காட்டும் திரையரங்க தொழில்நுட்பம் என்று டால்பி சினிமாவை புகழ்கின்றனர். சமீபத்தில் கூட ‘அவதார்3’ படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரோன், தனது படத்தைப் பார்க்க சிறந்த திரையரங்கம் டால்பி சினிமாதான் என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவில் தென்னிந்தியாவின் முதல் டால்பி சினிமாவை திறக்கிறது ஏஎம்பி சினிமாஸ். இதன் உரிமையாளர்களில் ஒருவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு. இந்த டால்பி சினிமாவில் திரையிடப்படும் முதல் படமே ‘அவதார் 3’. சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது இந்த திரையரங்கம்.
மலிவு விலை ஏர் ப்யூரிஃபையர்
டெல்லியைச் சேர்ந்த கிரிஷ் சாவ்லா என்ற இளைஞர் மலிவு விலையில் ஏர் ப்யூரிஃபையரை உருவாக்கி அசத்தியிருக்கிறார். சந்தையில் இதன் விலை வெறும் 4000தான். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள்தான் இதன் முக்கியமான மூலப்பொருட்கள். 1 சதவீதம் மட்டுமே பிளாஸ்டிக்கை பயன்படுத்தியிருக்கிறார். தான் உருவாக்கிய ஒவ்வொரு ஏர் ப்யூரிஃபையரும் விற்பனையாகும் போது ஒரு மரக்கன்றை நடுகிறார் கிரிஷ். ஏர் ப்யூரிஃபையர் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் காற்றை மட்டும்தான் சுத்தம் செய்யும். மரம் வெளியில் இருக்கும் காற்றை சுத்தம் செய்யும் என்பதால் மரக்கன்றை நடுவதாகச் சொல்கிறார் கிரிஷ்.
சதுரங்கத்தில் கலக்கும் சிறுவன்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் வரலாற்றில், அதனுடைய ரேட்டிங்கை பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார், சர்வாக்யா சிங் குஸ்வாஹா. இவரது வயது 3தான். சர்வாக்யா பிறந்து 3 வருடங்கள், 7 மாதங்கள், 20 நாட்கள் ஆகின்றன. இதற்கு முன்பு இந்தச் சாதனையை கொல்கத்தாவைச் சேர்ந்த அனிஸ் சர்க்கார் வைத்திருந்தார். அனிஸ் பிறந்து 3 வருடங்கள், 8 மாதங்கள், 19 நாட்களில் இந்தச் சாதனையை செய்திருந்தார். அனிஸின் சாதனையை இன்னொரு இந்தியக் குழந்தையே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சர்வாக்யா. சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் ரேட்டிங்கை பெற வேண்டுமானால், இந்த ரேட்டிங்கைப் பெற்ற ஒரு வீரரையாவது தோற்கடிக்க வேண்டும். சர்வாக்யாவோ ரேட்டிங் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களைத் தோற்கடித்து, சாதனையை படைத்திருக்கிறார்.
விலையுயர்ந்த வாஷிங் மெஷின்
கடந்த ஆறு மாதங்களாக ஜப்பானில் நடந்த ‘வேர்ல்டு எக்ஸ்போ’ எனும் புது கண்டுபிடிப்புகளின் கண்காட்சி சமீபத்தில்தான் முடிந்தது. இதில் இடம்பிடித்த ஹியூமன் வாஷிங் மெஷின் எனும் நவீன இயந்திரம் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை மட்டுமல்லாமல், இணையத்தையும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த ‘சயின்ஸ்’ எனும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த வாஷிங் மெஷினை கண்டுபிடித்திருக்கிறது. எப்படி வாஷிங் மெஷினை திறந்து துணிகளை உள்ளே போட்ட பிறகு மேல் மூடியை மூடுகிறோமோ அது மாதிரிதான் இதுவும்.
நாம் உள்ளே போய் மேல் மூடியை மூடியவுடன் இனிமையான இசை ஒலிக்கும்; துணியைப் போல நமது உடல் முழுவதும் துல்லியமாகச் சுத்தம் செய்யப்படும். அதாவது, நம்மை குளிப்பாட்டித் தருகிறது இந்த வாஷிங் மெஷின். இப்போது ஜப்பானிய சந்தையில் ஹியூமன் வாஷிங் மெஷின் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஒசாகா நகரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் முதல் ஹியூமன் வாஷிங் மெஷினை வாங்கியிருக்கிறது. இதன் புதுமை காரணமாக 50 மிஷின்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது, ‘சயின்ஸ்’. இதன் விலை சுமார் 3.47 கோடி ரூபாய்.
திபெத் புது வருடம்
சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், லடாக், இமாச்சலப் பிரதேசத்தில் வாழும் திபெத்திய மக்களால் கொண்டாடப்படும் திருவிழா இது. திபெத்தின் நாட்காட்டியின் படி புது வருட ஆரம்ப நாட்களில் தொடங்கும் இந்தக் கொண்டாட்டம் 15 நாட்களுக்கு நீடிக்கிறது. முதல் நாளில் கடவுள் வழிபாடு, நடனத்துடன், இபெக்ஸ் எனும் மலை ஆட்டை கௌரவிக்கும் பாடலைப் பாடி கொண்டாடுவார்கள். இரண்டாம் நாளில் கதிரவன், சந்திரன், மலை ஆட்டின் உருவங்களை மாவில் செய்து வீட்டில் வைப்பார்கள்.
சமையலறையின் சுவர்களில் அதிர்ஷ்ட சின்னங்களை ஓவியங்களாகத் தீட்டுவார்கள். மூன்றாம் நாள் செழிப்பான விளைச்சலுக்காக சந்திரனிடம் பிரார்த்தனை செய்வார்கள். வரும் டிசம்பர் 20ல் ஆரம்பிக்கும் இந்தக் குளிர்கால திருவிழா திபெத்தியர்களால் மட்டுமல்லாமல், திபெத்திய கலாச்சாரம் பரவியிருக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: த.சக்திவேல்
