×

பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் கொற்றவை

நன்றி குங்குமம் தோழி

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் பெண்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கொற்றவை அமைப்பு. அமைப்பின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பகிர்கிறார் அமைப்பின் தோற்றுநர் காருண்யா குணவதி.

“தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். நான் சிறுவயதிலிருந்தே அவர்களின் சிரமங்களை பார்த்திருக்கிறேன். இவர்கள் ஒரு நாளைக்கு 9 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். 1000 பீடிகளைச் சுற்றினால், அவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும். குறைவான சம்பளத்தில் கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு சுவாசப் பிரச்னைகள், முதுகு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பீடி சுற்றும் பெண்களை இத்தொழிலில் இருந்து மீட்டு அவர்களுக்கான மாற்றுத் தொழிலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கொற்றவை அமைப்பினை துவங்கினேன். அதன் முதல் கட்டமாக அவர்களுக்கு திறன் பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டேன். ஆனால், இவர்களுக்கு வேலை வாய்ப்பு அவசியம். பண ஓலை, சணல் பை தயாரிப்பு, தையல் பயிற்சி போன்ற திட்டங்களில் பத்தாயிரம் பேருக்கு மேல் அரசாங்கம் பயிற்சி அளித்திருப்பது தெரியவந்தது.

ஆனால், அதை பயின்றும் அவர்கள் முன்னேற முடியாமல் திணறினார்கள். காரணம், பயிற்சி பெற்றவர்களால் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சரியான அணுகல் இல்லாததுதான் என்று தெரிந்து கொண்டோம். எனவே, பீடி சுற்றும் தொழிலிலிருந்து மாற்றுத் தொழிலை தொடங்கும் பெண்களால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அல்லது பிற உற்பத்திப் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த உதவுவதற்காக ‘கொற்றவை’ வணிகத் தளம் தொடங்கினோம்.

ஆனால், பீடித் தொழிலை விட்டு புதிய தொழிலுக்கான பயிற்சிகள் பெற்று தொழில் தொடங்க சுமார் மூன்று மாதங்கள் ஆகும். அந்த மூன்று மாதங்கள் அவர்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய சூழல் நிலவியது. அதை சமாளிக்க அமைப்பின் சார்பாக அவர்களின் பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையை வழங்க முடிவெடுத்தோம். பெண்களுக்கு அவர்களின் வீடுகளிலிருந்து 100 மீட்டருக்குள் ஒரு மையம் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கே வந்து வேலை செய்ய ஊக்குவித்தோம். உதவித்தொகை வழங்கப்படுவது மட்டுமில்லாமல், அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அடித்தளத்தை நான் அமைத்தாலும் அனைத்து செயல்பாடுகளும் ஒருங்கிணைத்து முழு நிறுவனமாக உருவெடுக்க ஒன்றரை வருட காலம் எடுத்தது.

தற்போது மத்தளம்பாறை, சுரண்டை மற்றும் புளியங்குடி போன்ற ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மையங்களிலும் சுமார் 50 பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் தயாரிப்பு பொருட்கள் இ-மார்க்கெட், B2B ஆர்டர்கள் மற்றும் கார்ப்பரேட் ஆர்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. நன்கு அனுபவம் வாய்ந்த நபர்களால் பெண்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதல் 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு முழு நேர வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பீடி சுற்றும் போது கிடைத்த ஊதியத்தை விட கூடுதலாக, ஆரம்பக் காலத்திலேயே மாதம் 8,000 ரூபாய் வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது” என்றவர், மாற்றுத் தொழில் குறித்து பெண்களை அணுகுவதில் உள்ள சவால்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“பீடி சுற்றும் தொழிலிலிருந்து அவர்களை மீட்க பல சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை அவர்கள் தொடர காரணம் வீட்டில் இருந்தபடி வேலை செய்து கொண்டே பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள முடிகிறது என்கிறார்கள். இருப்பினும் 2,500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 82% பேர் பீடித் தொழிலை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்தனர். மேலும், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி குறித்த விழிப்புணர்வும் அவர்களிடம் இல்லை. ஆரம்பத்தில், அவர்களை அணுகிய போது குறைவான ஆதரவுதான் கிடைத்தது.

மாற்றுத் தொழில் தொடங்கினால் தோல்வியை சந்திக்கலாம். மேலும், பீடி நிறுவனத்தை விட்டு வெளியேறினால் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் பணம் கிடைக்காது என்று தவறாக நினைத்துள்ளனர். அவர்களுக்கு எங்களின் நிறுவனம் மேல் நம்பிக்கை வர வைக்க சிறிது சிரமமாகத்தான் இருந்தது. வணிகத் தளம் மூலம் தயாரிப்பு பொருட்கள் விற்கப்படுவது குறித்து அவர்களுக்கு புரிந்த பிறகுதான் மாற்றுத் தொழில் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. இது அவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பீடி சுற்றும் வேலையை பல வருடங்களாக செய்து வந்தவர்கள் ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டார்கள். அவர்கள் தற்போது விரைவாக குணமாகி வருகிறார்கள். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி நீங்கி உள்ளதாக கூறுகிறார்கள். சமூகம் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து மரியாதை கிடைப்பதாகவும் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தற்போது B2B பரிசளிப்புப் பொருட்கள், தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்கள், டெரகோட்டா நகைகள், ஹெல்த் மிக்ஸ் போன்ற உடனடி உணவுப் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகின்றன. கண்ணாடி ஃபிரேம்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற தொழில்நுட்ப ரீதியிலான தயாரிப்புகளையும் கொண்டு வரலாம் என்பது எதிர்கால திட்டமாக உள்ளது.

இதனால் மேலும் பெண்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம். எங்களின் முக்கிய நோக்கம் பெண்களுக்கான வேலை வாய்ப்பை தொடர்ந்து உருவாக்குவதுதான். கடந்த எட்டு வருடங்களாக பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் இருப்பதால், எங்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த முடிகிறது. என்னுடைய முதல் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் ஏஜென்சியான ‘ரஃபேல் கிரியேட்டிவ்ஸ்’ மூலம் ஈட்டும் வருமானத்தை அமைப்பில் முதலீடு செய்து வருகிறேன்” எனும் காருண்யா குணவதி, சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தாலும் பீடி சுற்றும் பெண்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்து தரும் நோக்கில் அமைப்பை வழிநடத்தி வருகிறார்.

மிகப்பெரிய மாற்றமாக கருதுகிறோம்!

செல்வராணி – அமைப்பின் பயனாளி.

“நான் 25 வருடங்களாக பீடி சுற்றும் வேலையை செய்து கொண்டிருந்தேன். இந்த வேலையை செய்வதால் அதிகப்படியான உடல் பிரச்னைகளும் இருந்தன. இரவும், பகலும் தூக்கம் தொலைத்து இந்த வேலையை செய்வேன். கொற்றவை அமைப்பினர் மாற்றுத் தொழில் செய்வது குறித்து எங்களிடம் பேசும் போது, உண்மையில் விடுதலை கிடைத்தது போல் உணர்ந்தேன். தொடக்கத்தில் பீடி சுற்றுவதை தவிர்த்து வேறு எதுவுமே தெரியாது என்ற பயம் இருந்தது.

ஆனால், கலைப் பொருட்களை தயாரிக்கும் திறன் பயிற்சியில் கலந்து கொண்டு, இப்போது தேங்காய் சிரட்டையில் அழகான கலைப்பொருட்களை தயாரிக்கிறேன். 45 வயதில் எனக்குள் இப்படியொரு திறமை இருப்பதை வெளிக்கொண்டு வந்த காருண்யாவுக்கு நன்றி. முன்பு நாங்க தயாரிக்கும் பீடிகள், அதை பயன்படுத்துபவர்களுக்கு கெடுதல் தருவது மட்டுமில்லாமல் எங்களின் வாழ்க்கையையும் பாதித்தன. ஆனால், இப்போது மாற்றுத் தொழிலில் எங்களது தயாரிப்புகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் மந்திரிகளுக்கும் பரிசளிக்கப்படுவதை மிகப்பெரிய மாற்றமாக கருதுகிறோம்.”

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Saffron Companion ,Tenkasi ,Tirunelveli ,
× RELATED நியூஸ் பைட்ஸ்